உலகை மாற்றுவோம்
– கவியரசர் முடியரசன்

உலகம் இங்குப் போகும் போக்கை
ஒன்று சேர்ந்து மாற்றுவோம்
ஒருவ னுக்கே உரிமை யென்றால்
உயர்த்திக் கையைக் காட்டுவோம்
கலகம் இல்லை குழப்பம் இல்லை
கடமை யாவும் போற்றுவோம்
கயமை வீழ உரிமை வாழக்
கருதி யுணர்வை ஏற்றுவோம்

உழைத்து ழைத்து விளைத்த நெல்லை
ஊருக் கெல்லாங் கொடுக்கிறோம்
உழைத்து விட்டுக் களைத்த பின்னர்
உணவில் லாமற் படுக்கிறோம்
களைத்துப் போன கார ணத்தைக்
கருதிக் கொஞ்சம் நோக்குவோம்
கடவுள் ஆணை என்று சொன்னால்
கண்ணில் நெருப்பைக் காட்டுவோம்

நமக்குள் நாமே வேறு பட்டு
நாலு பக்கம் போகிறோம்
நாதி யற்றுக் குனிந்து நெஞ்சம்
நலிந்து நாளும் சாகிறோம்
நமக்குள் வேறு பாடு காணல்
இல்லை யென்றே சொல்லுகிவோம்
நமது கூட்டம் நிமிர்ந்து சொன்னால்
நாளை உலகை வெல்லுவோம்.
உலகம் போகும்போக்கை யிங்கு மாற்றுவோம்
உடைமை யாவும் பொதுமைஎன்று சாற்றுவோம்.

mudiarasan01