ஊட்டல் விரும்புவரோ? -முனைவர் க.தமிழமல்லன்
ஊட்டல் விரும்புவரோ?
இடுப்பொடியத் துணிதுவைத்தால் இடைமுரிந்து போகுமென்றே
எளிதாகச் சலவைசெய்ய எந்திரங்கள் வாங்கிவிட்டார்!
அடுப்பருகில் நின்றுபுகை அணைக்காமல் ஆக்குதற்கும்
ஆவியினைப் பெற்றுவிட்டார்! அப்புகையைப் போக்குதற்கும்
அடுப்பின்மேல் புகைபோக்கி அமைத்துவிட்டார், போதாவா?
அம்மியிலே அரைக்காமல் கலக்கிகளை வாங்கிவந்தார்! கடுப்பின்றிக் கைகால்கள் வலிக்காமல் மாவரைப்பார்!
கண்ணான தாய்மார்கள் கசங்காத உடையோடு!
என்றாலும் கறிச்சோற்றை இளம்பெண்கள் ஆக்குங்கால்,
என்றேனும் மீக்குழம்பைச் செய்யுங்கால், உப்புகாரம்,
நன்றாகச் சேர்வதில்லை! நாவிற்கே ஏமாற்றம்!
நாவினிக்க உணவகத்தின் சுவையென்றும் வாராது!
மென்றுமென்று தின்றாலும் சுவைமேன்மை இல்லையடா !
மெல்லமெல்லக் கிழமைக்கோர் நாள்ஆக்கும் பணிவிடுத்தார்! மெல்லியர்கள் நெஞ்சினிலே உணவகத்தின் எண்ணமடா
மேலென்றே உணவகத்தில் உண்டுவிடச் சென்றிடுவார்!
உணவாக்கும் நற்பணியால் உளம்விரியும் மகளிர்க்கே!
உலைவைத்துச் சோறாக்கி உள்ளன்பால் அளிக்குங்கால்,
மணக்கின்ற மீன்குழம்பும் மனங்கவரும் மிளகுநீரும்
மாந்தர்தம் அன்புறவை மாண்பாக்கும் தாயுள்ளம்
உணவளித்தே உண்பாரைப் பார்த்தின்பம் கொள்ளுதற்கே
ஒப்பில்லை! குடும்பத்தை மேம்படுத்தும் பண்பதுவே!
பணப்பெருக்கம் மனச்சுருக்கம் தந்தடா! சமைக்கின்ற
பண்பழித்து விக்கியிடம் ஊபரிடம் ஊண்கேட்டார்!
வீட்டுக்கே ஊண்கட்டை ஊபர்வந்து கொடுக்கின்றார்!
விலைபற்றி நலம்பற்றிக் கவலையின்றி வாங்குகின்றார்!
பாட்டுகேட்டுப் படம்பார்த்துப் பேச்சொலியில் கவிழ்ந்தமக்கள்,
பாழான உணவுகளை விக்கியிடம் வாங்கிடுவார்
ஆட்டூன்கள் கோழிமீன்கள் வீட்டுக்குள் தருகின்றார்,
அளவின்றி ஊறுசெய்யும் பிறநாட்டார் கேடுகளை,
நாற்றாக நட்டுவிட்ட பயிர்நஞ்சை என்செய்வோம்?
ஊட்டிவிட்டுச் சொல்லுகின்ற ஊழியரை விழைவாரோ?
உணவாக்கும் சோம்பேறி உணச்சோம்பல் கொள்வாரோ?
-முனைவர் க.தமிழமல்லன்
- முனைவர் க.தமிழமல்லன்
Leave a Reply