என் தாய் – – தமிழ்மகிழ்நன்
அன்பினைக் காட்டி அறிவினைப் புகட்டி
அணியெனத் திகழ்பவள் என்தாய்!
தென்றலாய் வீசித் தேன்தமிழ் பாடி
சிந்தையில் நிறைந்தவள் என்தாய்!
மன்றிலில் பெயர்த்தி மாண்புடை பெயரர்
மலர்ந்திட மகிழ்பவள் என்தாய்!
வென்றிடும் வித்து! விளைநிலம் அவளே
விறலவள் தந்தனள் வாழ்க!
கனவினும் கடமை கணமதுள் மறவாள்
கலங்கரை விளக்கமே என்தாய்!
இனம்மொழி நாடு ஈடிலா உயிராய்
ஏற்றியே போற்றுவள் என்தாய்!
தனக்கென வாழாள் தன்மகார் வாழத்
தன்னுயிர்ப் பொருளினைத் தருவாள்!
மனமுயிர் மெய்யும் மலரென உருகும்
மழலையர் குணமவள் குணமே!
சுவைமிகு உணவை நொடியினில் சமைப்பாள்
தூயவள் படைத்திட இனிக்கும்!
துவையலும் கூட்டும் பொரியலும் பருப்பும்
சோற்றினில் கலந்தவள் தந்தாள்!
கவையிலா கைகள்! கதைசொலும் நெஞ்சம்!
கவின்மிக உடையவள் என்தாய்!
நவையிலா வாழ்வில் நன்மையை விழையும்
நற்குண முடையவள் என்தாய்!
பொன்னொளி மின்னும் புன்னகை ஒளியால்
புத்துயிர் தந்தவள் என்தாய்!
என்பொடு உயிரில் அன்பினைத் தோய்த்தே
இன்புறக் காத்தவள் என்தாய்!
“கன்னலின் சுவையே கனித்தமிழ்ச் சுவையாம்”
கற்றிடச் சொன்னவள் என்தாய்!
‘’தென்புல ஈழம் தீர்வது காண
சீறிடு புலியென’’ என்றாள்!
வேய்விளை மண்ணில் விழுப்புகழ் சுமக்கும்
வீரரைப் போற்றிடும் ஊரில்
தாய்த்தமிழ் பேண தனித்தமிழ் நாட்டை
சந்ததம் விரும்பிய குடியில்
காய்கதிர்க் கொடியை களத்தினில் ஏந்திய
கரவிலா மறவனின் மகனை,
தோய்ந்தநல் அன்பால் துணையெனத் தேர்ந்தாள்
தூய்மைக் காதலாள் மணந்தாள்!
சிலையெழில் கொஞ்சும் சீரினை விஞ்சும்
செல்வமாய் நால்வரைப் பெற்றாள்!
தலைமகன் முதல்வன் தன்னிக ரில்லா
தனிப்பெரும் புகழுடைப் பெரியோன்!
கலைமகள் அருளால் கண்ணெனுந் தமிழைக்
காத்திட ஆர்த்தெழும் ஒருவன்
கலைவளர் பள்ளியில் கணக்கியல் பயிற்றும்
கண்ணிறை காரிகை ஒருத்தி!
குலைவிலா உடலும் கூரிய மதியும்
குறைவறப் பெற்றவன் இளையோன்!
அலைகடல் அஞ்சும் அவனுரை கேட்டால்!
அவன்பெரும் ஆற்றலின் உருவம்!
விலையிலா உயிரை விரைவினில் இழந்தான்
விண்டிடில் அவன் புகழ் கூடும்!
நிலையிலா உலகை நீத்ததனன் முதலில்
நெடுந்துயர் தந்தனன் பிரிவால்!
மலையடி ஊறும் சுவைமிகு நீரை
வள்ளலார் கோயிலில் சேந்தி
தலையினில் இடுப்பில் நீர்க்குட மேந்தி
தன்னகக் கடமையைச் செய்தாள்!
தலைவரின் தோட்டக் கிணற்றினில் துணியைத்
தோய்த்தவள் வலிஎலா மிழந்தாள்!
இலையுதிர் காலச் சுருகெலா மள்ளி
இடுப்பொடு உடல்மிக நொந்தாள்!
கலைமகள் கழக நமசிவா யர்தம்
கண்ணுறும் தமிழினைக் கற்க
மலையினைச் சுற்றி அவர்மனை செல்ல
மண்ணினில் மலரடி தோய்ந்தாள்!
இலையிவள் போலே எனப்பலர் புகழும்
இன்னுரை கேட்டிட உழைத்தாள்!
மலையெனத் துன்பம் மாய்த்திட வரினும்
மண்மகள் பொறையினால் வென்றாள்!
இலக்கணம் மாறா இலக்கிய வாழ்வில்
இல்லறப் பெருமையைக் காத்து
கலக்கமே யின்றிக் கவலையைத் தள்ளி
கணவனே தெய்வமாய் வாழும்
குலமகள் அவளே! கூற்றமும் வெல்வாள்!
குன்றினில் விளக்கவள் வாழ்வு!
உலவிடும் தெய்வம் உண்மையில் என்தாய்!
உலகினில் அவர்க்கிணை யுண்டோ?
-திருக்குறட் பாவலன் தமிழ்மகிழ்நன்
Leave a Reply