பார்வதியம்மா01: kaavi_parvathiamma


தாய் என்ற
சொல்லுக்கே
தாயே நீ தானே?

தாளாமல்
அழுகின்றோம்
தாயே வருவாயே!

வீரத்தின்
இலக்கணத்தைப்
பெற்றெடுத்த
பெரும் பேறே

பார் போற்றும்
பார்வதியே!
பார் வதியும் தாய் நீயே!

பேரெடுத்த
பிள்ளை தனை
மடி ஏந்திய
தமிழ்த் தாயே..

இன வலி
சுமந்து
நீ பட்ட பாடு…
வரலாறு பாடும்..
விழி நீர்
சுமந்து என்றும்!

உற்ற துயர் புற்றெடுக்க
வெற்றுடலாய்
உணர்விழந்து
உலகெல்லாம்
உறவாட
உறவிழந்து
உயிர் வாடினாய்

பட்ட பாடு போதுமம்மா
போய் வாடி தாயே!
கொடியோர் முன்
உயிர் சுமந்து
நொடிந்தது இனி
போதுமம்மா!

இடி விழுந்த தேசத்தின்
துயர் முடிக்க
சபதம் கொண்ட
தாய் உள்ளம்
எங்கள் தலைவன் நெஞ்சம்.
.
அண்ணன் சோகமெல்லாம்
அடி நெஞ்சில் தீ பிடிக்க
பாடுமம்மா உலகம்
உன்னீகம் போற்றியிங்கே!

ஆழி போல் துன்பம்
கதறக் கதற ஊற்றி
இரக்கம் சிறிதும் இன்றி
இருளில் முகம் புதைத்து
மூழ்கடித்த கொடுமை
உலகம் அறிந்திராது

மரணச் செய்தி கேட்டு
மரத்து போனோம்
உரத்துக் கதறினோம்..
உலகுக்கும் கேட்கவில்லை..

வெந்து மனம்
துடித்தோமம்மா!
வேக்காட்டு வேதனையில்
சொந்த மண்ணில்
உயிர் புதைத்தோம்
உனக்காக விடை கொடுக்க

ஆதிக்க வெறியர்
ஆணவ முற்றுகையில்
ஆருமில்லாமல்
அரை உயிர் ஊசலாட
அன்புக்காய் ஏங்கி
அல்லும் பகலும்
தவித்தாயே!

ஆற்ற முடியாத
துயரால்
ஆண்டுகள் கடந்தும்
எண்ணி எண்ணி
அழுகின்றோம்!
எண்ணம் எல்லாம்
நீ நிறைந்தாய்..

அண்ணன் வருகைக்காய்..
“தம்பி வருவான்” என
வாசல் பார்த்து
விழி பூத்தாய்..

நீ மட்டுமா தாயே..?
ஏவல் நரிகளும்
சூழ்ந்து கிடந்தனவே..??
விலங்கிட்டு
எம் தலைவன்
உடல் கிழித்து
இழித்தபடி
இழுத்துச் செல்ல
கோணல் வாய்
ஓநாய்களும்
முழித்துக் கிடந்தனவே..
விழி மூடல் இன்றி..

தாயை விழியில்
சுமந்து
தாய்த் தேசம்
உயிரில் சுமந்தான்
தானைத் தலைவன்
எங்கள் அண்ணன் பிரபாகரன்.

மண்ணின் துயர்
முன்னே
உன் துயர் சிறிதென்று
அடுத்தவர்
துயர் களைய
சாகரத் துயர் அள்ளி
நெஞ்சில் புதைத்து
வைத்தான்..

தாயவர் துயர்
தீர்க்க
கானகம் வாழ்வாகி
வலிகள் சுமந்த
எங்கள் தலைவன்
துயரெல்லாம்….
தமிழர் எங்கள் துயரன்றோ?

சொல்லி அழ
வழி இன்றி
சொல்லவோர் உறவின்றி
மொழி இழந்து
கதறுகின்றோம்….

விழி ஏந்தி
தொழுகின்றோம்..
ஒளி விளக்காய்
இருள் துடைப்பாய்…

பெற்ற சேய்கள்
ஈரிரண்டாய்…
உற்ற தமிழர்
உலகம் திரண்டாய்..
குழறி அழ
நாமிருக்க
குமுறி நீயும் துடித்தாயே..

விடுதலையின்
சிறகுக்காய்
விடியலின் வரவுக்காய்..
கொடுத்த விலை
கோடியம்மா…
போதுமடி தாயே!
நீயும்
சுமந்த வலி
போதுமம்மா..

அடிமைத் தேசம்
வென்றெடுத்து
புதுச் சூரியன்
விதைப்போம்!

நாளை தோன்றும்
விடியல் வரை
போய் வாடி தாயே!

விடுதலையை மூச்செடுத்து
தமிழ் மண் களிக்கையிலே
ஆடிப் பாடிடலாம்
ஆனந்தக் கூத்திடலாம்!

மண் விடியும் நாளில்
மறுபடியும் பிறந்து வர
சென்று வாரும் எம் தாயே!
தாயவரின் தாயாரே!

senthamizhini_prpakaran01
செந்தமிழினி பிரபாகரன்