எழிலரசி அல்லது காதலின் வெற்றி 5 – பேரா.சி.இலக்குவனார்
(அகரமுதல 102 ஐப்பசி 08, 2046 / அக். 25.10.2015 தொடர்ச்சி)
எண்ணினர் தனியே யிருப்பதா யோர்நாள்
- காதலின் கையிற் கருவிய ராகி
இன்ப வாடல்க ளன்பாய்த் தொடங்கினர்.
தென்றல் தவழ்ந்து தேனுறு மலரினும்
- முத்த மளித்து முகமலர் கொண்டே
இன்ப மெய்து மெழினெறி கண்டே
எழிலர சிக்கோ ரின்ப முத்தம்
ஆடலன் விரும்பி அன்பி னளித்தான்.
காதல் கைமிகக் கருத்தழிந் தவளும்
- நிரைவளை முன்கை விரைவி னீட்டி
இளமுலை ஞெமுங்க வளைந்து புறஞ்சுற்றி
“ நின்மார் படைதலின்இன்பமு மின்று ”
நன்றே வாழ்க என்றவள் கூறினள்
எழுதோவியமா யிருக்கு மெல்லை
- மூவரில் மூத்தோன் முடுக்கென வந்து
கண்டனன் விழிகளிற் கனற்பொறி பறந்தன
வியப்பும் வெறுப்பும் திகைப்புடன் கொண்டனன்
தலைவரின் றங்கை தாழ்குல முடைய
ஆளை மணந்து அன்பாய் வாழ
- எண்ணிய துணிவை யெண்ணிக் கோபங்
கொண்டன னாயினும் கொடுஞ்சூள் கருதி
அவ்விடங் கடந்தன னறியா தவன்போல்!
- உற்றதை நவின்றனர்; உணர்விழந் தனரே !
புதைய லிழந்த பேதை யரென
பொட்டெனச் சாய்ந்தனர்; திட்டென எழுந்து
அடிமை யொருவனை யன்பாய் மணந்து
பிரிய நினையாப் பெருஞ் செல்வத்தால்
- கனவா னாக்குங் கருத்தை யுள்ளி
கவலை கொண்டனர் கடுஞ்சின முற்றனர்.
(எழில் கூடும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
(வித்துவான் படிப்பு மாணாக்கனாக இருந்த பொழுது
படைத்த தனித்தமிழ்ப் பாவியம்.)
ஐயாவின் எழில்நிறை இளமைக்காலப் படம் பார்த்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி. முகம் முழுவதும் பூத்திருக்கும் அந்தப் புன்னகையை எங்கள் முதுகலைவகுப்புக் காலத்தில் பார்க்க எங்களுக்குக் கொடுப்பினையில்லை; அவரை நேருக்குநேர் நிமிர்ந்து பார்க்கமுடியாத அளவுக்கு எங்களில் பலருக்கு அச்சம்!
அன்புடன்,
இராசம்