(அகரமுதல 104 ஐப்பசி 22, 2046 / நவ.08, 2015 தொடர்ச்சி)

 

attai_ezhilarasi03

 

மகிழ்ச்சி ததும்பும் மாநட் பினர்போல்

வேடிக் கையுடன் வியப்புச் சொற்களும்

கலந்துரை யாடியே காத்தவீ ரனுக்குப்

பலியிடுங் கடாவைப் பொலிவுறச் செய்து

  1. இழுத்துச் செல்லு மேழை களிடை 6

துள்ளுங் கடாப்போல் தோற்றம் விளைத்து

அடைந்தனர் முடிவில் யாருமில் காட்டை.

அவருடை தங்கை யவனுடை மையலில்

வீழ்க் காரணம் விளைத்த பிழைக்கு

  1. பழிகொள வெண்ணினர் விழிக ளழன்றன

ஒருவரை யொருவ ருற்று நோக்கினர்

கைகள் சென்று கைவாள் தொட்டன

ஆடலனுடைய, கோட்டமில் தோற்றம்,

அவர்கள் கல்லுளம் அனலிடை யிட்ட

  1. மெழுகுபோ லாக்க, நழுவின கைகள்;

மின்பொறி பட்டு மெலிவடைந் தவரென

நடுங்கினர் வலிமை யொடுங்கி நின்றனர்.

முரணிய தோற்றம் முழுது முணர்ந்து

அவர்கருத் தறியா தாடலன் தானும்.

  1. ஏறு போனின் றிறும்பூ தெய்தினான்.

அவர்க ளுள்ளத் திலவனும் முன்னாள்

எழிலர சிக்கோ ரின்ப முத்தம்

தழுவி யளித்ததும், தையல் மணந்தால்

நேருமிடரும் நினைவில் வரவே,

  1. மின்னொளி போல மேவிட வலிமை

புலியொரு மூன்று பொருந்துமொ ரேற்றிடம்

பாய்ந்ததை யொப்பப் பாய்ந்தன ரவன்மேல்

அவர்கள் பாய்தலுக் ககப்படா னாகித்

துள்ளி யோடினன்; தொடர்ந்தனர் விரைந்து

  1. பிடிபடா னென்று பின்னோ னொருவன்

வீசினன் வாளை; மேவிச் சென்ற

ஆடலன் தனக்கு அன்பா யென்றும்

ஒக்க வுறைவோ னுயர் முடி வீழ்ந்தது!

உள்ள மழிந்தனர்; ஒன்று மறிந்திலர்!

  1. நின்றனர் திகைத்து; நெடுஞ்சே ணிடையில்

ஆடலன் தானும் அருகித் தோன்றினன்!

இயல்பிற் சென்ற இளவலின் செயலும்

கொடிதெனக் கருதிக் கொல்ல நினைத்தனர்

(எழில் கூடும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(வித்துவான் படிப்பு மாணாக்கனாக இருந்த பொழுது

படைத்த தனித்தமிழ்ப் பாவியம்.)

பேராசிரியர் சி.இலக்குவனார்

பேராசிரியர் சி.இலக்குவனார்

http://www.ilakkuvanar.com/Noolkal/PeraNoolkal/Ezhilarasi.pdf