(அகரமுதல 105  ஐப்பசி 29, 2046 / நவ. 15, 2015 தொடர்ச்சி)

attai_ezhilarasi02

குற்றமொன் றில்லாக் குறுந்தொழில் புரியும்

  1. ஆளைக் கொன்றனர் ஆடலன் தப்பினன்

எழிலர சிக்கோ ரிடுக்கணும் விளைத்தனர்

எண்ணிய விளையும் இனிது முடித்திலர்

துன்பக் கடலில் தோயப் புகுந்தனர்

அறிவை யிழந்தனர் ஆண்மை குன்றினர்

  1. செய்வது யாவெனச் சிறிதும் அறிந்திலர்

வாட்கிரை யான மகனை யாங்கே

பறந்திடும் புட்கும் பாய்ந்திடும் நரிக்கும்

இரையாய்க் கிடத்தி யேகினர். இல்லம்

அடைந்தது மாங்கே அவனைச் சேணிடை

  1. “அவல் புரிய அனுப்பினோ ” மென்றனர்

அவ்வித மனுப்பல் அமைந்த தாகலின்

எவ்வித வியப்பும் எய்திலர் எவரும்

சென்றன பலநாள் கண்டில ளவனைப்

பலநாட் டங்கிய பான்மை நோக்கி,

  1. எழிலின் அரசி எய்தினள் துயரம்;

அண்மையி லீன்ற ஆவொன் றதனின்,

கன்றினைப் பிரிந்து கலங்குதல் போலக்

காதலன்வருகை காணாக் காதலி

உள்ளம் புழுங்கினள்; ஒருநொடி அவனைப்

  1. பிரிதற் கியலாப் பெற்றிய ளாங்கே

தம்முனோர்க் குறுகித் தாழ்ந்த குரலில்

நாணம் மிக்கு நாத்தடு மாறிச்

“சென்றஆ டலனேன் இன்னும் வந்திலன்?

உழைத்தற் கஞ்சி ஒடியொளிந் தனனோ?

  1. பொருளுடன் விடுத்திரோ? மருளுற் றதனைக்

கவர்ந்திட எண்ணிக் கரந்து திரிவனோ?

கள்வர் கூடிக் காதிட் டனரோ

மாற்றர் திரண்டு வழிமறித் தனரோ?

கள்வரும் காணின் நல்லவ ராகுவர்

  1. மாற்றல ரோவெனின் மனனுறத் துதிப்பர்

சென்றோ னைப்பின் தேடிலீர் போலும்

நாடிக் கொணர்மின் நயப்புட னவனை”

என்று வேண்டினள்; நன்று நன்று

நாளை வருவன்; நலித லெதற்கு”

  1. என்று மொழிந்தனர் இதயம் வருந்தினள்.

(எழில் கூடும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(வித்துவான் படிப்பு மாணாக்கனாக இருந்த பொழுது

படைத்த தனித்தமிழ்ப் பாவியம்.)

பேராசிரியர் சி.இலக்குவனார்

பேராசிரியர் சி.இலக்குவனார்