எழுதுங்கள்! வெற்றி உங்களுக்கே! – ஆற்காடு.க.குமரன்
வெற்றி உங்களுக்கே!
ஆட்சியாளர்கள் தவறாமல்
ஐந்தாண்டு படிப்பிக்கும்
ஆட்சிப் பாடத்தையே
புரிந்து கொள்ளாமல்
தேர்தல் தேர்வில்
தோல்வியடையும்
வாக்காளர்கள்!
வெற்றி தோல்வியை
வரையறுக்கும் வேடிக்கைத்
தேர்வு முறை!
தேர்வெழுதுங்கள்!
தோல்விப் பயமின்றி
முதுமையடைந்தும்
முடிவெடுக்கத் திணறும்
மூடர் கூட்டமதில்
முளைவிடும் தளிர்களே
முடிந்த வரை முயலுங்கள்!
வினாத்தாள் வினாக்களோடு
விடைத்தாள் வெறுமையாய்
உங்களுக்காக…
மனத்தில் உள்ளதை எழுதாதீர்கள்
பட்டறிவைப் பதிக்கத் தோன்றும்
தேர்வு ஒரு பட்டறிவே
பட்டறிவிற்கே பட்டறிவா?
மதியில் பதிந்ததை எழுதுங்கள்
புதிய பாதை புலப்படும்!
எல்லா வினாக்களுக்கும் விடையளியுங்கள்
சரியா தவறா சஞ்சலம் வீணே!
தெரிந்ததை எழுதுங்கள்
ஒவ்வொரு வினாவையும்
எதிர் கொள்வதே
ஒரு துணிவு
தளராமல் எழுதுங்கள்
பட்டறிவாகப் பாருங்கள்
மண்ணுக்குள் அடங்கும்வரை
வேண்டாமென்றாலும் விடாது..
அறிவுரையும்
வினாக்களும் மட்டுமே…..
கடந்து வந்த பாதை என்பதால்
கருத்துரைக்கிறேன்
பத்து பேர் பந்தயத்தில்
வெற்றிக் கோப்பை ஒன்றே….
கோப்பை தான் வெற்றியெனில்
ஆயிரம் கோப்பைகள் அணிவகுத்து நிற்கின்றன விற்பனை நிலையங்களில்
விற்காமல் தோற்றுப்போய்…
எதையும் கடந்து செல்லுங்கள் செல்கையில்
கவனமாகச் செல்லுங்கள்.
வீணாய் முடங்காதீர்
தானாய் முடங்கும் நாள் வரும்.
எதற்கும் அடங்காதீர்
நீங்கள் நீங்கள் மட்டுமே
முன்மாதிரி
பின் மாதிரி
எதுவும்
உங்கள் மாதிரி இல்லை
எண்ணியதைச் செய்யுங்கள்
எண்ணம் போல் வாழுங்கள்
திண்ணம் வெற்றி
இவண்
ஆற்காடு.க.குமரன் 9789814114
Leave a Reply