kavimani_thesikavinayakam01

                ஒற்றுமையாக உழைத்திடுவோம் – நாட்டில்

     உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்;

வெற்றுரை பேசித் திரிய வேண்டாம் – இன்னும்

     வீணாய்ப் புராணம் விரிக்க வேண்டாம்.

                கூடி விருந்துண்ண வேண்டவில்லை – பெண்ணைக்

     கொண்டு கொடுக்கவும் வேண்டவில்லை;

நாடி எவரொடும் நட்பினராய்த் – தேச

     நன்மைக் குழைப்பதில் நட்டம் உண்டோ?

                   கீரியும் பாம்புமாய்ச் சண்டையிட்டு – சாதி

     கீழென்றும் மேலென்றும் நாட்டிவிட்டு,

பாரதத் தாய்பெற்ற மக்கள் என்று – நிதம்

     பல்லவி பாடிப் பயன் எதுவோ?

                   வேதன் முகத்தில் உதித்தவரே – இங்கு

     மேலா யெழுந்த குலத்தினராம

பாத மதில்வந்த பாவியரே – என்றும்

     பாரில் இழிந்த அடிமைகளாம்!

                   வாயில் விடம்உண்டு பாம்பினுக்கு – கொட்டும்

     வாலில் விடம் உண்டு தேளினுக்கு

தாயிற் சிறந்த பிரமனக்கும் – இரு

     தாளில் விடம் உண்டோ? சாற்றுவீரே!

                  உச்சி மரத்திற் சுவைக்கனியும் – தூரில்

     ஓடிப் பரந்தெழும் வேரதனில்

நச்சுக் கனியும் பழுத்த பலாமரம்

     நானிலத் தெங்குமே கண்டதுண்டோ?

                    சாதி இரண்டலால் வேறுளதோ? – ஒளவைத்

     தாயின் உரையும் மறந்தீரோ!

ஆதி இறைவன் வகுத்ததுவோ? – மக்கள்

     ஆக்கி யகற்பனை தான் இதுவோ?

                   நாயனார் வந்த திருக்குலத்தை – உயர்

     நந்தனார் வந்த பெருங் குலத்தைத்

தீய குலம்எனத் தள்ளுவரேல் – அது

     தெய்வம் பொறுக்கும் செயலமோ?

                    வேதியராலே மழைவருமேல் – வயல்

     வேலை செய்யாது விளைந்திடுமோ

வாதமெலாம்கட்டி வைத்திடுவோம் – ஒத்து

     வாழ்வதை மேற்கொண்டு டுழைத்திடுவோம்.

                      வீட்டுக்குள் சண்டைகள் போடுவதேன்? – கூரை

     வெந்து விழுவதும் கண்டிலிரோ?

நாட்டுக்கு நன்மையை நாடுபவர் – இந்த

     நாடகம் ஆடல் நகைப்பலவோ?

                   மானமே வாழ்வின் உயிர்நிலையாம் – அதை

     மாசுறச் செய்தல் கொடுங்கொலையாம்;

ஈனச் சாதியெனும் பேச்சினைப்போல் – நெஞ்சை

     ஈர்ந்திடும் வாளொன்று வேறுளதோ?

                மன்னுயிர்க் காக முயல்பவரே – இந்த

     மானிலத் தோங்கும் குலத்தினராம்;

தன்னுயிர் போற்றித் திரிபவரே – என்றும்

     தாழ்ந்த குலத்தில் பிறந்தோர், அம்மா!

 – கவிமணி தேசிகவிநாயகம்(பிள்ளை)