கருகும் பிஞ்சுகள் – பாவலர் கருமலைத்தமிழாழன்
கருகும் பிஞ்சுகள்
பகர்கின்ற கட்டாயக் கல்விச் சட்டம்
பறைசாற்றும் குழந்தைத்தொழி லாளர் சட்டம்
முகம்காட்டும் கண்ணாடி போல யிங்கே
முன்னிருந்தும் கண்மறைக்கும் வறுமை யாலே
அகரத்தை எழுதுதற்கே கனவு கண்டு
அன்புத்தாய் நீவிவிட்ட அரும்வி ரல்கள்
தகதகக்கும் கந்தகத்து மருந்தில் தோய்ந்து
தயாரித்துத் தருகிறது நெருப்புக் குச்சி !
சீருடையில் அழகொளிரச் சிரிப்பு திர்த்துச்
சிற்றுந்தில் அமர்ந்தபடி கைய சைத்துப்
பேருவகை தருமென்று கனவு கண்டு
பெருமன்பில் நீவிவிட்ட பிஞ்சு விரல்கள்
சீருடையில் தொழிற்சாலை பெயர்வி ளங்க
சீறிவரும் வெடிமருந்து வாசம் வீசும்
பேருந்தில் செல்கிறது வறுமை என்னும்
பெயரழிக்கத் தீக்குச்சி அடுக்கு தற்கே !
பூப்போன்ற மென்விரல்கள் புத்த கத்தைப்
புரட்டிக்கண் வியந்திடவே பார்த்துப் பார்த்து
நாப்புரள பேசுதற்கு முயற்சி செய்து
நல்லறிவு பெறவாய்த்த இளமை தன்னில்
தீப்பற்றும் வெடிமருந்து கிடங்கிற் குள்ளே
திரியாக வறுமையிலே கருகுவ தெல்லாம்
காப்பாற்றத் திட்டங்கள் வகுத்தி டாமல்
கள்ளராக ஆட்சிசெய்யும் கயவ ராலே !
– பாவலர் கருமலைத்தமிழாழன்
அன்புடையீர் வணக்கம். என்னுடைய கவிதையை வெளியிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.