(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 38 : அரங்கின் தோற்றம்- தொடர்ச்சி)

பூங்கொடி
சிறியர் செய்கை

 கற்களை வீசினர் காரிருள் இடைநின்

றற்பச் செயலென அறியார்; அறிஞர்
நெஞ்சிற் பதிந்த கருத்துரை நிலமிசை
விஞ்சிப் படர்வதை விரும்பாச் சிறியர் 95
புன்மைச் செயல்செயப் புறப்படல் படரிருள்
புன்மைக் கணத்தைப் புறங்காட் டச்செயும்
கதிரோன் தன்னைக் கையால் மறைக்கும்
மதியோர் செயலினை மானும்; அந்தோ!

பூங்கொடியின் கனன்றுரை

 கற்கள் வீழலும் கண்கள் சிவந்தனள் 100
 `எற்கெனை அழைத்தீர் இகழ்வதற் கோ?'என

நுவன்றனள் ஒருகல் நுதற்படச் செந்நீர்
சிந்திச் சிவந்தன மேடையும் ஆடையும்;
கனன்றனள் சொல்லினைக் கனலெனச் சிந்தினள்;
பெண்மையில் ஆண்மை பிறத்தலுங் கூடும் 105
உண்மை உணர்த்தினள் ஊரினர்க் கவ்விடை;
`சான்றீர் பெரியீர் சாற்றுவென் கேண்மின்!
ஆன்ற பெரும்புகழ்த் தமிழின் அருமை
கேடுறல் நன்றோ? கிளைபோல் வருமொழி
பீடுறல் கண்டும் பேதமை பூணல் 110
மாண்பன் றென்றேன், மடமைச் சேற்றில்
வீழ்ந்து மடிதல் வேண்டா என்றேன்,
தாழ்வும் இழிவும் சாதியில் வேண்டா!
குலமும் தேவும் ஒன்றெனக் கொள்க;

நலந்தரும் இவைஎன நவின்றேன், ஈண்டை 115
ஏற்போர் உளரேல் ஏற்று வாழ்க!

ஏலா ராயின் இவணின் றொழிக!

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி

 கார் - கருமை, எற்கு - எதற்கு, நுவன்றனள் - சொல்லினள், சாற்றுவென் - சொல்லுவேன், ஆன்ற - நிறைந்த, கிளை - உறவு, பீடு - பெருமை, தேவு - தெய்வம், உளரேல் - இருப்பாராயின்.