கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 48 : தொல்காப்பியம் உணர்ந்த காதை
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 47 : பூங்கொடியின் உறுதிமொழி – தொடர்ச்சி)
பூங்கொடி
அதிகாரம் 10. தொல்காப்பியம் உணர்ந்த காதை
குறளுரை பரப்புதல்
நற்பொருள் உணர்ந்த பொற்கொடி குறளின்
சொற்பொருள் தெளிந்து சூழ வருவார்க்கு
உணர்த்தும் பணியை உவப்புடன் பூண்டனள்;
கணக்கில் அடங்கார் கற்று நடந்தனர்,
இணர்ப்பூங் குழலாள் இவ்வணம் இருந்துழித் 5
தாமரைக்கண்ணி வருகை
தாமரைக் கண்ணி தந்தனள் வருகை;
காமரு பூங்கொடி கடிதின் எழீஇத்
தூமன மகிழ்வால் தொழுதனள் தழீஇ
நீராற் கண்ணை நிறைத்துப் புகழ்மொழி
கூறா நின்றனள்; கூறிய நங்கையை 10
ஆரத் தழுவி அப்பெரு மாட்டி
வீரத் திருமகள் வாழிய என்றனள்;
பூங்கொடி வினவல்
`ஊரில் புதுமை உற்ற துண்டுகொல்?
அன்னையும் தோழியும் என்பிரி வாற்றி
நன்னல மோடவர் துன்னினர் கொல்லோ? 15
உரையாய் தாயே’ என்னலும் `உன்னைத்
தாமரைக்கண்ணி மறுமொழி
அருண்மொழி நிலைமை
திரைவாய்க் கடல்நகர் திருத்துவான் வேண்டித்
தனியே விடுத்ததால் தையலர் இயல்பான்
நனிகலங் கினர்பின் நலிவு துடைத்துச்
செந்தமிழ் காக்க வந்தவள் என்மகள், 20
எந்த இடும்பையும் ஏற்றிட வல்லாள்,
பகைஎறி வடிவேல் பைந்தமிழ் காக்கும்
குகைவதி புலிபெறு குலக்கொடி அவளாம்,
அவன்வழி வந்தவள் அஞ்சாள் பகையைக்
கவண்விடு கல்லால் கலங்குதல் செய்யாள், 25
என்று தேறினள்' எனுமுரை கேட்டு
நின்றவள் `என்தாய் வாழிய’ என்றனள்;
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
++++
காமரு – அழகுமிக்க, கடிதின் – விரைவில், எழீஇ – எழுந்து, தழீஇ – தழுவி, துன்னினர் – அமைந்தனர், திரை – அலை, திருத்துவான் – திருத்த.
++++
Leave a Reply