கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 50 : பூங்கொடி வருந்துதல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 49 : கோமகன் நிலைமை-தொடர்ச்சி)
பூங்கொடி
பூங்கொடி வருந்துதல்
`ஐயகோ தமிழே! ஐயகோ தமிழே! 55
செய்ய தொண்டுளம் சிலரே கொண்டனர்;
உன்பெயர் சொல்லித் தந்நலம் நுகர்வார்
நின்னலம் சிறிதும் நினையார் உளரே’
என்றுளம் ஏங்கி இனைந்தனள் இளங்கொடி;
தாமரைக்கண்ணி அறிவுரை
`இன்று பொதுப்பணி எளிதென எண்ணேல் 60
உள்ளமும் உயிரும் உணர்வும் தமிழென
உள்ளுவோன் எவனோ அவனே தமிழன்!
தமிழ்தமிழ் என்றுரை சாற்றுவோர் எல்லாம்
தமிழ்காப் போரென நினைப்பது தவறு;
இருவகைப் பகை
பொதுப்பணி புரிவோய்! புந்தியில் ஒன்றுகொள் 65
எதிர்ப்படு பகையை எளிதில் வெல்லலாம்;
சதிச்செயல் புரிந்து நண்பாய்ச் சார்ந்து
சிரித்துச் சிரித்துச் செய்வ தெல்லாம்
மறைத்துப் பகைக்கும் மனத்தை வெல்வது
பரிக்கொம் பாகும் பாவாய்! தமிழ்க்கும் 70
அகப்பகை புறப்பகை ஆயிரண் டுண்டென
மிகப்புரிந் தாற்றின் மேம்படும் நின்பணி;
பன்மொழி பயிலெனல்
பூங்கொடி நின்புகழ் பூவுல கெங்கும்
ஓங்கிய தாதலின் உன்னொடு சொற்போர்
ஆற்ற நினைவோர் ஆங்காங் கெழுவர்; 75
வேற்று மொழிகள் விரைவில் பயில்நீ!
தெலுங்கு கன்னடம் தென்மலை யாளம்
ஒழுங்கு பெறநீ ஓதுதல் வேண்டும்
பழம்பெரு மொழியுள் ஒன்றெனப் பகுக்கும்
வழங்குதல் இல்லா வடமொழி முதலா 80
நெருநெல் முளைத்திவண் வருமொழி வரையில்
மறுவறப் பயின்று மாற்றார் வாயைத்
திறவா வண்ணம் செய்திடல் வேண்டும்!
அவ்வம் மொழியார் ஒவ்வும் வகையில்
செவ்விதின் உரைப்பாய் செந்தமிழ்ப் பெருமை; 85
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
+++
நுகர்வார் – அனுபவிப்பார், உள்ளுவோன் – நினைப்போன்.
+++
Leave a Reply