கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 9 & 10
[திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 7 & 8 தொடர்ச்சி) : வெ. அரங்கராசன்]
திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 9 & 10
ஒன்பதாம் பாசுரம்
திருக்குறள்-தமிழ்மறைநூல்
மாலளந்தான் மூவடியால் ; முப்பாலன் ஈரடியால் ;
ஞாலத் தெளிவூட்டும் நல்லறப்பா சாற்றுமுயர்
சீலம் உணர்மாந்தர் தேசம் பலவாழ்வார் ;
காலம் கடந்துய்யும் கன்னித் தமிழ்மறைநூல் ;
மூலப் பிறப்பொக்கும் மண்ணிலே எவ்வுயிர்க்கும்
வேலியின்றி வாழ வகுத்தவரே வள்ளுவர்காண் !
சாலப் பயன்ஈனும் தீங்குறளைச் சென்றோதக்
காலைப் புனலாடிக் கைமலர்கொள், எம்பாவாய் !
பத்தாம் பாசுரம்
சிலப்பதிகாரம்-முதல் காவியம்
ஆன்ற குடிப்பிறந்து, ஆசையெல் லாந்துறந்து,
கோன்தவற்றால் கொண்டான் இழந்து, மனம்
குன்றாமல்
தான்தனியள் கண்ணகியாள் கோன்வீழ்த்தி
நீதிகண்டாள் !
மூன்றின் சிறப்புரைக்கும் முத்தமிழ்க்
காப்பியமாம்
சான்றஇளங் கோவடிகள் சாற்றிய காற்சிலம்பு
தோன்றும் அதிகாரம் நூல்போல் அதுகாறும்
ஈன்றாள் இலை,தமிழாள்; ஈதே முதலாகும் !
வான்ஏத்தும் நற்சிலம்பின் ஓசைபயில்,
எம்பாவாய் !
– கவிஞர் வேணு குணசேகரன்
Leave a Reply