கவிஞாயிறு தாராபாரதி 1 & 2

அவருக்குள் தமிழ்மணக்கும், அறிந்தே முன்னர்
அன்னைபெயர் புட்பமென அமைந்த தாமோ?
குவளைக்குள் பூகம்பம்! கொடையாய்ச் செந்தீ!
கொடுங்காலூர் வரையெழுந்து கொதித்த செந்நா!
திவலை க்குள் பொறியேற்றுத் தீயைச் சேர்த்துத்
திரையாக்கிச் செந்தமிழாய்த் தெறிக்கும் தாரா!
இவருக்கோர் கவிமலரை இயற்றி வந்தேன்!
இவரெழுத்தை என்குரலில் இயம்பு கின்றேன்! (1)

காவியங்கள் பாடவில்லை; காதல் என்னும்
கற்பனைக்குள் கரையவில்லை; கானல் நீரைத்
தூவிநஞ்சை வளர்க்கவில்லை; சொல்லால் பொய்யைத்
தொடுத்தளிக்கும் கவிதையில்லை; சொகுசு வாழ்க்கை
மேவுதற்காய் மாறவில்லை; மேன்மை கொன்று
மேனிலையை அடையவில்லை; மேடை வேண்டிப்
பாவையெங்கும் பாடவில்லை; பசப்புச் சொற்கள்
பகன்றுநிற்கும் பழக்கமில்லை; பகட்டு மில்லை! (2)

-சந்தர் சுப்பிரமணியன் :

கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்