கானல் கனா – ஆற்காடு க. குமரன்
கானல் கனா
சொல்லாத கனவு செல்லாமல் போனது
ஆணாகிய என் வயிற்றில் அம்மா மகவாய்
இதயத்தில் சுமப்பவனையே இடையிலும் சுமக்கும்
பெண்கள் இருப்பதாய்க் கண்ட கனவு…
கண்ணைத் திறந்து கடவுள் கண்டதாய்க் கண்ட கனவு
கட்டமும் நட்டமும் இல்லாமல் இருப்பதாகக் கண்ட கனவு
கண்ணை மூடியதும் காணும் அவளென்
கண் முன்னே நிற்பதாய்க் கண்ட கனவு
சாதிக்கு இறுதிச்சடங்கு செய்து
சமாதியானதாகக் கண்ட கனவு
பொழுதுபோக்கு பொழுதுபோக்கு என்று
ஆயுள் பொழுதைப் போக்காமல் பொறுப்போடு
இந்தச் சமுதாயம் நடந்து கொள்வதாகக் கண்ட கனவு
வரும் உழவர் திருநாளில் உழவர்கள் எல்லாம்
தம் உரிமையை அடைந்ததாகக் கண்ட கனவு
சுரண்டிக்கொண்டு ஓடியவன் எல்லாம்
திரண்டு வந்து தீர்ப்புக்குப் பின்
தண்டனை அடைந்து நீதியைத்
தலைநிமிரச் செய்ததாகக் கண்ட கனவு
அதிகாரிகள் எல்லாம் கை கட்டாமல்
கைக்கூலிகள் ஆகாமல்
அரசியல்வாதிகளை ஆட்டிப் படைப்பதாகக் கண்ட கனவு….
ஓலைச்சுவடியில் எழுதி வைத்தால் ஒடிந்து போகும்
ஒளிப்பதிவில் பதித்து வைத்தால்
ஒலிக்கும்போது பிழையாகும்
கணினியில் பதித்து வைத்தால் காணாமல் போகக்கூடும்
என என் பெயரை என் மூதாதையர் வழியில்
கல்வெட்டில் பதித்து வைப்பதாகக் கண்ட கனவு
சொல்லாது நான் கண்ட கனவுகள்
அத்தனையும் சொல்லிவிட்டேன்
செல்லாமல் போகுமோ
செல்லரித்துப் போகுமோ
கல்லாத நான் படைத்த என் கவி
எனைக் கரை சேர்க்குமோ
கண்ணயரப் போகிறேன்
கனவு கண்டு விட்டுச் சொல்கிறேன்
காத்திருங்கள்!
Leave a Reply