குழந்தை இலக்கிய விருதாளர்களுக்குப் பாராட்டு விழா!
குழந்தை இலக்கிய விருதாளர்களுக்குப் பாராட்டு விழா!
திருச்சிராப்பள்ளி: கார்.12 / நவ.27: திருச்சி சுருதி அரங்கில் நந்தவனம் அமைவம், கோவிந்தம்மாள் தமிழ்மன்றம் இணைந்து குழந்தை இலக்கியத்திற்காக விருது பெற்ற கவிஞர் மு. முருகேசு, கவிஞர் மு. பாலசுப்ரமணியன் ஆகியோருக்குப் பாராட்டு விழாவினை நடத்தின.
கல்வியாளர் எமர்சன் செய்சிங்கு இவ்விழாவிற்குத் தலைமை வகித்தார். ’இனிய நந்தவனம்’ ஆசிரியர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில், கவிஞர் பொன்னிதாசன், விருதுபெற்ற மு.முருகேசு எழுதிய ‘பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி இராசாவும்’ எனும் சிறுவர் கதை நூலை ஆய்வு செய்து உரையாற்றினார்.
மு.பாலசுப்பிரமணியன் எழுதிய ‘அன்னப்பறவை’ சிறுவர் பாடல் நூலைக் கல்வியாளர் பா.தென்றல் ஆய்வு செய்தார்.
முனைவர் கீரைத்தமிழன் சிறப்புரையாற்றினார்.
விழாவில், சிறுவர் இலக்கியங்களைத் தொடர்ந்து படைத்து விருதுகள் பெற்ற மு.முருகேசு, மு.பாலசுப்பிரமணியன் இருவருக்கும் திருச்சி வி.சி.பி நிறுவனத்துணைத்தலைவர் இரா,தங்கையா பாராட்டு மடல்கள் வழங்கிச் சிறப்பித்தார்.
மேலும், விருதுபெற்ற எழுத்தாளர்களுக்குக் குழந்தைகள் சார்பில் பள்ளி மாணவிகள் அன்னலட்சுமி, இலட்சுமிசிவாணி இருவரும் சிறப்புக் கவிதை வாசித்துப் பாராட்டினர்.
விழாவில், ‘பொதிகை நிலா’ ஆசிரியர் இரா.ப.சந்திரசேகரன், ‘துடிப்பு’ இதழின் துணையாசிரியர் சே.தமிழ்ச்செல்வன், ‘தாழம்பூ‘ இதழாசிரியர் எம்.எசு.கோவிந்தராசன், கவிஞர் கொள்ளிடம் காமராசு முதலானோர் கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில் ப.நாகராசன் அனைவரையும் வரவேற்றார்.
நிறைவில், எழுத்தாளர் மழபாடி இராசாராம் நன்றி கூறினார்.
Leave a Reply