கொழுநிழல் மறைக்கும் அடர் காட்டில் . . .- சொற்கீரன்
கொழுநிழல் மறைக்கும் அடர் காட்டில் . .
கொழுநிழல் மறைக்கும் அடர்செறிக்கானின்
வரிநிழல் காட்டும் ஓர் வேங்கை கண்ணுறீஇ
உறுமிய ஒற்றும் செஞ்சின வேங்கையும்
வெரூஉய் ஒளிக்கும் குழைகவி யோமை
சேய்மையின் வரூஉம் ஆளி ஆங்கு கண்டே.
வெண்கோடு குத்தி வெரு வெரு செய்யும்
மள்ளற் களிறும் சுரத்தின் கண்ணே
பிளிறும் ஓதையில் நோலா நெஞ்சும் நோன்றார்
கலி மிழற்றும் காட்சி மலியும் நிரம்பா நீளிடை
அரசிலை எஃகம் தனியன் ஏந்தி
வரும் கொல் என துயில் மறுத்து
நெஞ்சில் வேகும் வேர்க்கும் வேர்க்கும்.
புள் மொழி ஓர்த்து புதல் மறைத்து ஆங்கே
புல்லென ஒலிக்கும் நிமித்தம் அஞ்சும்.
பொருளும் வேண்டாம் புதைபடு இருளின்
மருளும் வேண்டாம் எல்லே உயிர்க்கும்
அவன் புன்னகை ஈண்டு புகுதந்திடுக என
இறை இறைஞ்சும்மே இறைவளை நெகிழ.
_________________________________________________________
குறிப்புரை
_________________
அகம் 252 _________நக்கண்ணையார்.
(நக்கண்ணையார் பெண்பாற்புலவர் ஆவார். ’பெருங்கோழி நாயகன் மகள் நக்கண்ணை’ எனவும் கூறப்படுவார்.
இப்பாடலில் வரும் “ஆளி” என்பது நம் தமிழின் தொன்மை அடையாள விலங்கான “யாழி”யைக்குறிக்கும். புலியைக்கண்டு யானை அஞ்சும். இவை இரண்டுமே யாழியைக்கண்டு மிகவும் அஞ்சும். அத்தகைய வெஞ்சுரம் ஏகி பொருள் தேட்டைக்குப் போன தலைவனை எண்ணி எண்ணி அஞ்சும் தலைவியின் நிலப்பாட்டையே நான்இந்த சங்க நடைச்செய்யுளில் எழுதியிருக்கிறேன். . . . . . .சொற்கீரன்)
++++
சொற்கீரன்
Leave a Reply