siriyaaandmullivaaykkaal

“சிரியா” குழந்தையும் முள்ளிவாய்க்காலும்

கடற்கரையோரம் ஒதுங்கிய

பாலகனின் உடலைப் பார்த்து

நெஞ்சு கனக்கிறது.

காவுகொண்ட கடலே

காலனோடு கருத்து வேறுபட்டிருக்கக் கூடும்

இந்தப் பாலகனின் உயிரைப் பறிப்பதா என்று

.குழந்தையோடு குடும்பத்தையிழந்த தந்தையின்

வலியையும் வேதனையையும்

எங்களால் ஆழமாகவே

உணரமுடியும்.

இறைவன் வரம் கொடுத்தாலும்

இதயங்கள் தாங்காது அந்த வலிலையை.

அப்பனுக்கு ஆறுதல் சொல்ல

யாருளரோ நாமறியோம் – ஆயினும்

வல்லமை கொடுவென்று மன்றாடுவோம்.

சின்னக் குழந்தையின்

வாழ்ந்த காலச் சிரிப்பு – இனி

நினைவில் வரும் போது

தந்தை

எப்படி வாடிப் போவார்

என்பதை எங்களால்

புரிய முடியும்.

ஏனெனில்,

ஆறு ஆண்டுகளாகியும்

ஆறாத வடுவையும்

மாறாத வலியையும்

அடுக்காக அனுபவித்தல்லவா

நீறுபூத்த நெருப்பாக

நீட்சி பெற்றிருக்கிறது

எங்கள் நெடும் துயர்.

சிரியா அரசுக்கான

முற்கற்பிதத்தை

சிறீலங்கா அரசு

சிரத்தையுடன் எங்கள் சிந்தனைக்குள்

செதுக்கியுள்ளது.

ஆதலால்,

சிரியா சரியா

என்றெல்லாம்

சீர்தூக்கிப் பார்கப் போவதில்லை.

பாரபட்சமாய் இந்தப் பார்

இயங்குவதால்,

ஊர் அழிந்ததால்

சீரழிந்த எங்கள் வாழ்வுக்குள்ளிருந்தும்

சில விடயங்கைளச்

சீர்தூக்கிப் பார்க்கச் சீண்டுகிறது

சினம் கொண்ட மனது.

பிளந்த இதயத்தால்

பீறிட்டு வரும் கண்ணீரை

வீழ்ந்த அந்த மழலைக்கு

காணிகையாக்கிப்,

பிழையென உணர்வதை

பீடத்தில் போட்டெரிக்கிறேன்

தேயாத வளர்பிறையொன்று எமக்காய்

தோன்றுமென்ற நம்பிக்கையில்.

தமிழர்கள் இலங்கைத் தீவின் வடக்கே முள்ளிவாய்க்காலில்

குர்திசுகள் வடக்குச் சிரியாவில்.

களங்களும் காலங்களும் மாறினாலும்

அவலங்களுக்கு அளவுகோலில்லை.

சிரியா, துருக்கி, ஈரான், ஈராக்கென்று

எங்கு பரவியிருந்தாலும்

எங்களைப் போலவே

குந்தியிருப்பதற்கு ஒரு நிலம் கேட்டதால்

வேட்டையாடப்படுகிறார்கள் குர்திசுகள்**.

நான்கு வருடங்களாய் நரகவாழ்க்கை

நகருமிடமெங்கும் மரணமும் துரத்தியது.

செய்திகளுக்குக் குறைச்சலில்லை – ஆனால்

அவர்களின் சேதிகள்தான் சேரவில்லை.

 

இன்று அயிலனின்* மரணம்

குர்திசுகள் அவலத்தின் அடையாளமாக

அகிலத்தின் முன்னே.

இனியாவது ஐரோப்பாவின்

இதயக் கதவுகள் திறக்குமா

இல்லை அங்கேரியின் முள்வேலிகள் இனியும் நீளுமா?

குர்திசுகளுக்கோ

கடப்பதற்கு ஒரு கடலிருந்தது

கரையேறுவதற்கு ஒரு நாடிருக்கிறது என்ற நம்பிக்கையிருந்தது.

எங்களுக்கோ நந்திக்கடலின் மௌனத்தோடு

எல்லாம் முடங்கிப் போனது.

தூக்குவதற்கே யாருமின்றி

நாலுபக்கமும் பரவியிருந்த

பிஞ்சு மழலைகளின் உடலங்களை,

தாய் இறந்ததும் தெரியாமல்

பால்பருக முயன்ற குழந்தையின் உணர்வினை,

அம்மாவின் அரவணைப்பிலேயே

முள்ளிவாய்க்காலில் மீளாத் துயில்கொண்ட

எங்கள் குழந்தைகளைப் பற்றி

ஏனிந்த உலக மனச்சாட்சி இன்னும் உலுக்க மறுக்கிறது?

ஊட்டிய ஆகாரம் உள்ளிறங்கும் முன்னே

ஆட்டிலறி பறித்தெடுத்த எங்கள் பாலகரின்

மரணத்தின் போதுமட்டும்

இந்த உலகேன் பாராமுகமாயிருந்தது?

காலச் சக்கரத்தில் பாலச்சந்திரனை

மரணத்தின் பின்னும் காணாமல் போகச் செய்ய

எப்படி முடிந்தது அவர்களால்?

எட்டுத்திக்கும் பாயும் மனம்

நெஞ்சப் பாரத்தால்

கட்டுப்பாடின்றி போனாலும்

அரசியல் பேசாமல்

அறிவியல் கருத்துகளைச் சொல்லமால்

ஆய்வுகள் செய்யாமல்,

ஒரு சராசரி மனிதனாய்

மானுடத்தை நேசிப்பவனாய்

மனித நேயத்தை விரும்புபவனாய்

உணர்வின் வரிகளை உள்ளபடிக் கொட்டியுள்ளேன்.

நிறுத்துப் பாருங்கள் நியாயம் உண்டாவென

ஆனால் எம் எழுத்தை நிறுத்த முயலாதீர்கள்

நிறங்கள் பூசாதீர்கள்.

முத்திரை குத்தல்களாலேயே

முகவரியிழந்த இனம்

இத் தரணியில் மீண்டும் தளிர்க்க வேண்டுமெனில்

அடையாளம் வேண்டும் – அது எம்

அடிப்படையாய் திகழ வேண்டும்.

ஆதலால் அதனை அடையும் வரைதனில்

இணைந்து போராடுவோம்.

நிலைநிறுத்த முடியாமல் போனால்

நாளைய விதைதன்னிலும் நன்றாய் வளர்வதற்காய்

நிலத்திற்கும் இனத்திற்கும் உரமாவோம்!

[*கடற்கரையோரம் கரையொதுங்கிய குழந்தையின் (சடலத்தின்) பெயர் அயிலன். குர்திசு இனத்தை சார்ந்த அயிலனின் பெற்றோர் சிரியாவின் வடபகுதியில் வாழ்ந்து வந்தவர்கள்.

**குர்திசுதான் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்ந்தும் உயிர்ப்பு நிலையிலுள்ளது.]

-ச.பா.நிர்மானுசன்

https://nirmanusan.wordpress.com/Nirmanusan01