சுந்தரமூர்த்தி கவிதைகள்

சிலேடை  அணி 12

வில்லம்பும் புருவக்கண்ணும்

வளைந்திருக்கும் ,கூர்முனியோ வஞ்சிக்கத் தாவும்,
களைப்புற்றோர் மீளவழி  காட்டும் – திளைப்புதரும்,
விண்ணோரும், மண்ணோரும் வீதிதனில் சண்டையிடக்
கண்புருவம் வில்லம்பாம் காண் .

பொருள்

வில்லம்பு

1 ) அம்பு பூட்டிய வில் வளைந்திருக்கும்.
2) அம்பானது தன் கூர்மையால் பகைவரை வஞ்சிக்க எந்நேரமும் ஆயத்தமாக இருக்கும் .
3) போரில் களைப்புற்றோர் கூட வெற்றி பெற
உதவிகரமாக இருக்கும்.
4) கலைநயமிக்க வில்லம்பு பார்க்க இனிமை    தரும்.
5) உலகில் தேவர்களாக இருந்தாலும் மண்ணாளும் வேந்தர்களானாலும் அவர்கள்தம் அழிவிற்கும் காரணமாக அமைகிறது.
கண்புருவம்
1) கண்ணிற்கு மேலுள்ள புருவம் வளைந்திருக்கும்
2) கண் அம்பைப் போன்றே கூர்மையுடையதாய் இருக்கும்,
ஆடவர்கள் மனத்தில் பெண்களின் கண் பார்வை பல வஞ்சனைகளைச் செய்யும்.
3) களைப்புற்றுச் சாய்ந்தவனும் பெண் பார்வை பட்டால் குணமடைகிறான்.
4) உலகில் இயற்கை மகிழ்வில் திளைக்கக் கண் பார்வை இணை செய்கிறது.
5) விண்ணோகும் , மண்ணோரும் , ஒருவருக்கொருவர் கடைக்கண் பார்வைக்கு வீதியில் சண்டையிட்டு மாய்வதும் உண்டு.

மேற்கண்ட காரணங்களால் வில்லம்பும் ,புருவக்கண்ணும் ஒத்துப் போவதைக் கண்டுணர்க.

கட்டிக்குளம் ஒ .சுந்தரமூர்த்தி

கட்டிக்குளம்
ஒ .சுந்தரமூர்த்தி