சொல்ல முடியாத சொல்

உன் பாதையும்
என் பாதையும்
வெவ்வேறாக இருக்கலாம்
ஆனால் அவை
ஒரே கையின்
இரேகைகள்

நீ
கண்ணீரை விட
ஆழமானவள் (ன்)
சோகத்தை விட
அழகானவள் (ன்)

பாவத்திற்கு கிடைத்த
மன்னிப்பை போல
நீ எனக்குக் கிடைத்தாய்

என்னை மறந்துவிட்டதாகச்
சொல்கிறாய்
பிறகு ஏன்
உன் கண்ணில் நீர்

ஒவ்வொரு மூச்சும்
உன்னை சந்திக்கப்
புறப்படுகிறது
ஏமாற்றத்தோடு
திரும்புகிறது

நான் உன் மூச்சு
என்னை நீ விட்டாலும்
மீண்டும்
வாங்கித்தான் ஆகவேண்டும்

உன் மௌனத்தில்
என் காயம் உறங்க
இடம் கொடு

நீ
சொல்ல முடியாத
சொல்
சொல்ல முடியாததைச்
சொல்லும் சொல்

உன் வேர்கள்
என் கண்ணீரைத்
தேடி வருகின்றன

தண்ணீர்த் தொட்டி
மீன்களைப்போல
உனக்குள்ளேயே
நீந்திக் கொண்டிருக்கின்றது
என் எண்ணங்கள்

உன் கண்ணில்
நான் செத்து
மிதக்கிறேன்

கூடு கட்டத்
தன் உதிர்ந்த இறகுகளையே
பொறுக்கும் பறவையைப் போல
நான் உன் நினைவுகளைப்
பொறுக்குகிறேன்

என்னை
என்னிடத்தில் ஒப்படைத்தாய்
என்னை வைத்துக்கொண்டு
என்ன செய்வது என்று
தெரியவில்லை எனக்கு

என் வாழ்க்கைப்
பயணத்திற்குக்
கட்டுச் சோறாய்
உன் நினைவுகள்
தாகத்திற்கு அருந்தக்
கண்ணீர்

நீ நதி
நான் உன்னில் விழுந்த
சருகு
நீ எங்கே கொண்டு போகிறாயோ
அங்கேதான்
நான் போகமுடியும்

ஆயுள் முழுவதும்
உனக்காகக்
காத்திருக்கத் தயார்
மரணம் போல்
நீ நிச்சயமாக வருவதாயிருந்தால்

உன்னிடம் நடந்து
காயங்களோடு
திரும்புகிறது மனம்

மனம்
பசித்து அழும்போது
உன் நினைவுகள்
அள்ளி எடுத்துப்
பாலூட்டுகிறது

உன் நினைவுகளும்
தொட முடியாத
தூரத்திற்குப்
போகிறேன்

என் பூக்களில் நீ
வசவுகளை எழுதிகிறாய்

நீ நடந்த
பாதையில் நடந்தேன்
காலில் தைத்தது
இதயச் சில்

உன் இதயத்திற்குள் நுழைய
வழி பார்க்கிறேன்
ஊசியில் காதைத் தேடும்
பார்வை மங்கிய
கிழட்டுத் தையல்காரனைப்போல

பல் பிடுங்கிய பாம்பாய்
என்னை
உன் பெட்டிக்குள்
வைத்திருக்கிறாய்
நீ விரும்பும் போது
மகுடி ஊதி
ஆட வைக்கிறாய்

பிரிந்து போகின்றவளே
நீ திரும்பிப் பார்க்காவிட்டாலும்
உன் இதயம்
திரும்பிப்பார்க்கிறது

நீ பலவீனமானவள்
ஆனால்
உன் ஆயுதங்கள்
பயங்கரமானவை

என் உடைந்த கனவுகளால்
உன் வீட்டைக்கட்டிக்கொள்
உன் இதயத்தில்
எரியும் நெருப்பால்
உன் விளக்கை ஏற்றிக்கொள்

உன் நினைவு வருமுன்
வந்துவிடு

நான்
எங்கே சென்றாலும்
அது உன் சபையாகவே
இருக்கிறது

கூட்டவோ குறைக்கவோ
தேவையில்லை
நீ எல்லா வகையிலும்
சரியாக இருக்கிறாய்

இந்தக் கவிதைகள்
பழைய காயங்களைத்
திறக்கின்றன

சந்திப்பு
உன் ஆடை
பிரிவு
உன் நிருவாணம்

கண்ணைவிட்டு
நீ புறப்படுவது போல
உன்னை விட்டு
நான் புறப்படுகிறேன்

உன் நினைவுகள்
என் சிதை
அதில் எரிந்து கொண்டேயிருப்பது
என் வாழ்க்கை

 – கவிக்கோ அப்(பு)துல் இரகுமான்