தகரக்குப்பிகளைக் கொண்டாடுவோர் சங்கம்

 

பெரியாரே!  பெரியாரே!
நீங்களோ ஓயாமல் படித்தீர்கள்
ஆளும் உங்கள் சீட சிகாமணிகளோ
ஓயாமல் நடிக்கிறார்கள்.
இது எந்தச் சித்தாந்தில் வரும்?

முன்னணி  என்று பெயர் வைத்தவனெல்லாம்
மானுட  இனத்தையே பின்னணிக்கு இழுக்கின்றான்

இங்கே நந்தினிகள் மீண்டும் மீண்டும் கூட்டு வல்லுறவில் கொல்லப்படுகிறார்கள்

ஏலம் விடப்பட்ட நீதிதேவதை
பணக்காரர்கள் வீட்டில் பற்றுப் பாத்திரம்
தேய்த்து ஈட்டிய வருமானத்தில்
வாழ்க்கைப்படி(சீவனாம்சம்) கேட்டு வழக்குத் தொடுத்தாள்bgupah

தள்ளித் தள்ளி வைக்கப்பட்டதில்
வயதாகிப்போனதால்
முதியோர் உதவித்தொகை கேட்டும்
கையூட்டில்லாமல் கிடைக்காத நிலையில்
சிலபல  ஆண்டுக்கு முன்னே செத்துப்போனதாய்
செவிவழி அறிந்தேன்.

செய்திவெளியிடச் சொல்லிப்
போராடிய கூட்டத்தில்
தேசப் பகைவர்கள் கலந்துவிட்டதாய்
காவல்துறை செய்த கலவரத்தில்
சாகடிக்கப்பட்ட உடலங்கள் சிந்திய குருதி
நன்கு காய்ந்துவிட்டது
மிக நன்றாகக் காய்ந்துவிட்டது.

பொறுக்கித் தேவதையென்று
காட்டமாய்ப் பேசிய தேசப்பற்றாளர்க்கு
அடுத்த ஆண்டு தாமரை விருதுகள் வகைக்கொன்றும்
பாரத  இரத்தின விருதும் வழங்க
ஆணை வரலாம் என்கிறார்கள்

எல்லாமே சின்னப் பாட்டியின் ஆணையின்படிதான்
நடந்ததென்று வாலாட்டும் கூட்டமொன்று
மேசை தட்டும் பேரோசையில்
எட்டுத்திக்கு உண்மைகளும்
முள்ளுடைய காட்டுக்கு
முழுவதும் சென்றன

பெரியாரே! பெரியாரே!
நீங்களோ தன்மானமே பெரிதென்றீர்
நாங்களோ தகரக்குப்பியே பெரிதென்கிறோம்.

  – தமிழ்சிவா