(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 13/17 தொடர்ச்சி)

 

தனித்தமிழ்க் கிளர்ச்சி: 14/17

தமிழ்க்கிளர்ச்சி தனைவிரும்பித் தமிழ்மறவர் சிலர்முன்பு
தமிழ்தமிழ்செந் தமிழென்று தவித்தார்கள் அம்மானை
தமிழ்தமிழ்செந் தமிழென்று தவித்தவரைக் கொடியசில
தமிழரே தண்டித்து வெறுத்தனர் அம்மானை
வெறுத்தோர் எலாம்இன்று விரும்புகின்றார் அம்மானை       (66)

உரிமை

இனியும் தமிழர்கள் ஏமாற இயலாதால்
தனியாக தமிழர்க்குத் தரவேண்டும் அம்மானை
தனியாக தமிழர்க்குத் தரவேண்டின் இணைந்துள்ள
இனியநல் இந்தியத்தை எதிர்ப்பதாமே அம்மானை
எதிர்க்காது தமிழுரிமை ஈயக்கேள் அம்மானை       (67)

தண்ணியசெந் தமிழ்நாடு தமிழர்க்கே அம்மானை
தண்ணியசெந் தமிழ்நாடு தமிழர்க்கே யாமாயின்
நண்ணு பிறநாட்டார் நகருவரோ அம்மானை
நகராது தமிழ்க்குழைத்தால் நலம் பெறலாம் அம்மானை       (68)

தழைத்த தமிழ்மொழிக்கும் தமிழர்க்கும் நன்மையுற
உழைப்போர்க்கே தமிழ்நாடு உரியதுகாண் அம்மானை
உழைப்போர்க்கே தமிழ்நாடு உரியதாம் என்றக்கால்
உழைப்பின்றிச் சிலரிங்கு உறங்குவதேன் அம்மானை
உறங்குபவர் நாட்டிற்கு ஒரு சுமையாய் அம்மானை       (69)

ஆக்கம்

அமிழ்தான வளம்பலதாம் அமைந்த திருநாடாம்
தமிழ்நாட்டில் தமிழுக்கே தலைமைவேண்டும் அம்மானை
தமிழ்நாட்டில் தமிழுக்கே தலைமைவேண்டு மாயிடினே
இமிழ்கடல்சூழ் உலகாட்சி இயற்றுமோ அம்மானை
இயற்றல் தமிழ்க்கெளிதாம் இயற்கையுமாம் அம்மானை       (70)

 

– பேராசிரியர் சுந்தர சண்முகனார்

  (ஆக்கம்:  1948)

தொடரும்

 

+++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்புரை :-

 

66 – முன்பு, தமிழுணர்ச்சி ததும்பியவரை வெறுத்தவர்களெல்லோரும் இன்று தமிழை விரும்புகின்றனர்.
67 – இணைந்த இந்தியாவை எதிர்த்து மாறுபடாமலேயே தமிழரின் தனியுரிமையரசைக் கேட்டு வாங்கிக் கொள்ளவேண்டும். திண்ணியநல் மறஇளைஞர் திகழ்ந்து விளங்கிடும்

68 – தமிழ்நாடு தமிழர்க்கே இருப்பினும் தமிழ்க்குத் தீங்கு செய்யாது உழைத்தால் பிறநாட்டினரும் தமிழ்நாட்டில் வாழலாம்.
69 – உழைப்பின்றி உண்டுகளித்து உறங்குபவர்கள் நாட்டிற்குத் தேவையில்லை. பெருஞ் சுமையே அவர்கள்.
70 – தமிழ்நாட்டு நிலையங்கள் ஒவ்வொன்றிலும் தமிழே தலைமைப் பதவியேற்று ஆட்சி செய்யவேண்டும். அவ்வாட்சி தமிழ்க்கு மிக எளிதே.

+++++++++++++++++++++++++++++++++++++++++++

[இதழாசிரியர் குறிப்பு: தமிழ்த்தேசிய இலக்கை உடைய கட்சியினரும் அமைப்பினரும் இந்நூலைத் தங்கள் கொள்கை விளக்க நூலாக அறிவித்து நடைமுறைப்படுத்தலாம்.]