தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 15/17
(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 14/17 தொடர்ச்சி)
தனித்தமிழ்க் கிளர்ச்சி: 15/17
இனித்தநறுந் தமிழ்மக்கள் இயன்றவரை தமக்குரிய
தனித்தமிழில் எழுதுவதே தகுதியுடைத் தம்மானை
தனித்தமிழில் எழுதுவதே தகுதியுடைத் தாமாயின்
தனித்தமிழ்ச் சொற்கள் சில தமிழிலில்லை யம்மானை
இல்லையென் றாற்புதிதாய் இயற்றவேண்டும் அம்மானை (71)
பழித்தற் கிடமின்றித் தமிழ்நாட்டுப் பண்புகளை
எழுத்தாளர் தமிழ்நடையில் எழுதவேண்டும் அம்மானை
எழுத்தாளர் தமிழ்நடையில் எழுதவில்லை எனினினிமேல்
விழித்த தமிழ்மக்கள் விடுவரோ அம்மானை
விடமாட்டார் அன்னவரை வெறுத்திடுவார் அம்மானை (72)
வீசும் புகழொளிசால் வியன்தமிழர் எஞ்ஞான்றும்
பேசும் போதாங்கிலத்தில் பேசுவதோ அம்மானை
பேசும்போதாங்கிலத்தில் பேசவேண் டாமெனின்
காசுபல செலவிட்டுக் கற்கலையோ அம்மானை
கற்றதுவெள் ளையராண்ட காலத்தில் அம்மானை (73)
சீர்கொண்ட வளமிகு செந்தமிழ் நாட்டிலுள
ஊர்களின் ஆங்கிலப்பேர் ஒழியவேண்டும் அம்மானை
ஊர்களின் ஆங்கிலப்பேர் ஒழியவேண்டு மாமாயின்
நேர்கொண்ட ஆங்கிலத்தின் நிலையென்ன அம்மானை
ஆங்கிலரோ டாங்கிலமும் ஆங்கிலவாம் அம்மானை (74)
தமிழ்மக்கட் கினியென்றும் தடையின்றித் தனித்தகுதித்
தமிழ்பெயர்கள் தமையேநாம் சாற்றவேண்டும் அம்மானை
தமிழ்ப்பெயர்கள் தமையேநாம் சாற்றவேண்டு மாமாயின்
தமிழல்லாப் பெயர்களின்று தங்கினவே அம்மானை
போனது போகஇனிப் புதுக்கிடுவோம் அம்மானை (75)
– பேராசிரியர் சுந்தர சண்முகனார்
(ஆக்கம்: 1948)
தொடரும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
குறிப்புரை :-
71 – தமிழர்கள் இயன்றவரை தனித்தமிழிலேயே எழுதவேண்டும். தமிழில் சில சொற்கள் இல்லையேல் புதிதாய் உண்டாக்க வேண்டும்.
73,74, ஆங்கிலேயராட்சியில் கற்ற ஆங்கிலத்திலேயே இனியும் பேசலாகாது. ஊர் முதலியவற்றிற் குள்ள ஆங்கிலப் பெயரையும் ஆங்கிலரோடு அனுப்பிவிட வேண்டும்.
75 – போனது போக, இனியாயினும் தமிழ்மக்கட்குத் தமிழ்ப் பெயர்களையே வைக்கவேண்டும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
[இதழாசிரியர் குறிப்பு: தமிழ்த்தேசிய இலக்கை உடைய கட்சியினரும் அமைப்பினரும் இந்நூலைத் தங்கள் கொள்கை விளக்க நூலாக அறிவித்து நடைமுறைப்படுத்தலாம்.]
Leave a Reply