(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 15/17 தொடர்ச்சி)

 

தனித்தமிழ்க் கிளர்ச்சி: 16/17

 

இன்னும் ஆரியப்பெயரை இயம்பாது பொருள்கட்கு
நண்ணுபெயர் களைத்தமிழில் நவிலவேண்டும் அம்மானை
நண்ணுபெயர் களைத்தமிழில் நவிலவேண்டு மென்றிடினே
தண்ணீர், சோறு எனும் தமிழைத் தாழ்த்துவதேன் அம்மானை
தாழ்த்தியவர் ஆரியராம் தகையிலிகள் அம்மானை       (76)

 

தாயில்மொழியாம் தனித்தமிழ்தும் நாட்டிலுறு
கோயிலில் நம்தமிழே குலவவேண்டும் அம்மானை
கோயிலில் நம்தமிழே குலவவேண்டு மாமாயின்
வாயில் வடமொழியின் வாழ்வென்ன அம்மானை
சுந்தரரைச் சிவன்தமிழே சொல்லென்றான் அம்மானை       (77)

ஆங்கிலத்திற் கடிமையாய் அல்லலுற்ற தமிழ்த்தாயை
ஈங்கினிமேல் தலைமகளாய் இருத்தவேண்டும் அம்மானை
ஈங்கினிமேல் தலைமகளாய் இருத்தவேண்டு மாமாயின்
பாங்கான இந்திதனைப் பரப்புவரே அம்மானை
பரப்பவிடின் தமிழ்முன் போல் பதவியறும் அம்மானை       (78)

பொய்ஞ்ஞானம் நீக்கிப் புத்துணர்ச்சி பெறச்செய்யும்
மெய்ஞ்ஞானத் துறைதமிழில் மேவியுள தம்மானை
மெய்ஞ்ஞானத் துறைதமிழில் மேவியுள தேயன்றி
விஞ்ஞானத் துறைதானும் வீற்றுளதோ அம்மானை
வீற்றிருந்தே அழிந்ததினி விரித்திடலாம் அம்மானை       (79)

தமிழல்லா மொழிகளில் தங்கியநற் கருத்துளைத்
தமிழில் மொழிபெயர்த்துத் தரவேண்டும் அம்மானை
தமிழில் மொழிபெயர்த்துத் தந்தால் இனிமேல்நம்
தமிழில் புதுச்சொற்கள் தழைக்குமால் அம்மானை
தழைக்கின் அதுவுமொரு தனியழகாம் அம்மானை       (80)

– பேராசிரியர் சுந்தர சண்முகனார்

  (ஆக்கம்:  1948)

தொடரும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்புரை :-

76. தண்ணீர், சோறு எனும் தமிழ்ச்சொற்கள் தாழ்ந்தன வென்றும், ஜலம், சாதம் எனும் வடமொழிச் சொற்களே உயர்ந்தன என்றும் எண்ணும்படி ஆரியர் செய்துவிட்டனர். இனி இது பலிக்காது.
77. கோயிற்பணி செய்யும் குருக்கள்மரபில் தோன்றிய சுந்தரரையே நோக்கி, என்னைத் தமிழால் பாடு என்று சிவபெருமானே அறிவித்தாராம்.
78 – தமிழ் நாட்டில் தமிழைவிட இந்திக்குச் செல்வாக்குத் தந்தால் முன்போல் தமிழின் பதவி கெடும்.

79,80 – தமிழில் இருந்த விஞ்ஞானம் முதலிய பல துறைநூற்கள் கடற்கோள் முதலியவற்றால் அழிந்தன. இனி அயல்மொழிகளிலுள்ள விஞ்ஞான முதலியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளவேண்டும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++

[இதழாசிரியர் குறிப்பு: தமிழ்த்தேசிய இலக்கை உடைய கட்சியினரும் அமைப்பினரும் இந்நூலைத் தங்கள் கொள்கை விளக்க நூலாக அறிவித்து நடைமுறைப்படுத்தலாம்.]