(தனித்தமிழ்க் கிளர்ச்சி 1/17 தொடர்ச்சி)

தனித்தமிழ்க் கிளர்ச்சி : 2/17

கற்றார் களிப்பெய்தக் கவின்சிறந்த நயமீந்து
வற்றா வளமுடைத்து வண்தமிழ்காண் அம்மானை
வற்றா வளமுடைத்து வண்தமிழே யாமாகில்
பற்றார் பலகுறைகள் பகருவதேன் அம்மானை
பகரல் கடல்முதலாம் பகைவரினால் அம்மானை       (6)

பழியில் சுப்பிரமணிய பாரதியார் பகர்ந்ததுபோல்
மொழிகளிலே இனியதுநம் முத்தமிழே யம்மானை
மொழிகளிலே இனியதுநம் முத்தமிழே என்பதற்கு
வழியுடன்ஓர் அகச்சான்று வகுத்துரைப்பாய் அம்மானை
தமிழ்என்றா லேயினிமை தானறிவாய் அம்மானை       (7)

அயல்மொழியில் இல்லாத அரியதொரு ழம்முதலாம்
இயல்பொலியாம் எழுத்துகள் இன்தமிழ்க்குண்டம்மானை
இயல்பொலியாம் எழுத்துகள் இன்தமிழ்க்குண்டாமாயின்
முயல்வுறுஆ ரியஎழுத்தை மொழிவதெங்ஙன் அம்மானை
இயலினிய நம்தமிழ்க்கவ் இடியொலியேன் அம்மானை       (8)

வயல்வளஞ்சேர் தென்னாட்டு வண்மொழியாம் தமிழினிலே
அயல்மொழிகட்கில்லாத அகப்பொருளுண் டம்மானை
அயல்மொழிகட்கில்லாத அகப்பொருளுண் டாமாயின்
மயல்மிக்க காமுகரோ மாண்தமிழர் அம்மானை
காமமில்லை அதுதெய்வக் காதல்காண் அம்மானை       (9)

சாதலே வந்திடினும் சற்றும் சலியாநற்
காதலினும் இனியதுநம் கவின்தமிழே யம்மானை
காதலினும் இனியதுநம் கவின்தமிழே எனின் அதனை
ஓதல்நம் இளைஞர்க்கு உயர்வன்றோ அம்மானை
மணப்பதன்முன் தமிழ்நூலை மணக்கவேண்டும் அம்மானை      (10)

– பேராசிரியர் சுந்தர சண்முகனார்

  (ஆக்கம்:  1948)

தொடரும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++

[6]. கடற்பெருக்காலும், தமிழ்நாட்டில் குடிபுகுந்த பிறராலும் பல தமிழ்நூல்கள் அழிந்தன.

[7]. அகச்சான்று உள்ளுக்குள்ளாய் உடன்பொருந்திய நற்சாட்சி. தமிழ் என்ற சொல்லுக்கே இனிமையென்பது நேர்பொருள்.

[8]. தமிழ், மனிதர் தோன்றிய முதற்காலத்தில் தோன்றியதாதலின் கடுமையில்லாத ழ முதலிய இனிய எழுத்துக்களுடன் தோன்றியது.

[9]. அகப்பொருள் காதலன் காதலிகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வரையறுத்துக்கூறும் இலக்கணம், இவ்விலக்கணம் தமிழில்மட்டுமே உள்ளது.

[10]. இளைஞர்க்குத் தமிழ்க்காதலே இன்றியமையாதது (முக்கியம்).
+++++++++++++++++++++++++++++++++++++++++++

[இதழாசிரியர் குறிப்பு: தமிழ்த்தேசிய இலக்கை உடைய கட்சியினரும் அமைப்பினரும் இந்நூலைத் தங்கள் கொள்கை விளக்க நூலாக அறிவித்து நடைமுறைப்படுத்தலாம்.]