(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 3/17 தொடர்ச்சி)

 தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 4/17

முத்தமிழ்

குயில்மயில்போல் இன்பம் கொடுக்குமொரு மொழியென்றால்
இயலிசைநா டகமூன்றும் இருக்கவேண்டும் அம்மானை
இயலிசைநா டகமூன்றும் இருக்கவேண்டு மாயிடினே
பயில்தமிழ்அம் முச்சிறப்பும் படைத்துளதோ அம்மானை
சிலப்பதிகா ரத்தில்முச் சிறப்புமுள தம்மானை       (16)

இயற்றமிழ்

புதுக்கியதேன் சுவைசொட்டும் புகழ்ச்சிமிக்க தமிழதனில்
மதிக்குநல்ல நூற்கள்பல மண்டியுள அம்மானை
மதிக்குநல்ல நூற்கள்பல மண்டியுள வானாலும்
ஓதுக்கலுறும் குப்பைகளும் உள்ளனவால் அம்மானை
உள்ளகுப்பை ஆரியத்தின் உதித்தனவாய் அம்மானை       (17)

இடமார்ந்த தமிழ்நாட்டில் இலங்கு தமிழாம்
தடமொழிபல் தமிழ்க்கதைநூல் தாங்கியுள தம்மானை
தடமொழிபல் தமிழ்க்கதைநூல் தாங்கியுள தாமாயின்
வடமொழியி னின்றுசில வந்ததேன் அம்மானை
வடவர்முன் திருவடியே வஞ்சித்தார் அம்மானை ⁠ (18)

புதுமைமிகும் நயம்பலதாம் புலப்படுத்தித் தமிழ்மொழியில்
பொதுமறையாம் திருக்குறள்தான் பொருந்தியுளதம்மானை
பொதுமறையாம் திருக்குறள்தான் பொருந்தியுளதாமாகில்
மதிகெடுக்கும் வடவரது மனுநூலேன் அம்மானை
ஓரம்சொல் மனுநூலை ஒதுக்கவேண்டும் அம்மானை ⁠ (19)

இசைத்தமிழ்

 

இசைப்பின் இறைவனையும் இன்புறுத்தும் இயல்புடைய
இறையிற் சிறந்தமொழி இன்தமிழே யம்மானை
இசையிற் சிறந்தமொழி இன்தமிழே யாமாகில்
இசையரங்கில் இறுதியிலே இசைப்பதேன் அம்மானை
இசைப்பதற்குக் காரணம்நம் ஏமாற்றம் அம்மானை       (20)

– பேராசிரியர் சுந்தர சண்முகனார்

  (ஆக்கம்:  1948)

தொடரும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்புரை :-

 

 1. சிலப்பதிகாரம் இயல், இசை, நாடகம் என்னும் முச்சுவையும் அமைந்த செந்தமிழ் நூல்.

  17. சில புராணக் குப்பைகள் ஆரியத்திலிருந்து தமிழ்க்கு வந்தன.

  18. ஆரியர்கள் தமிழில் உள்ள சில கதைகளைத் தம் ஆரியத்தில் மறைவாக மொழிபெயர்த்துக்கொண்டு, பின்னர் இது இங்கிருந்துதான் தமிழில் போயிற்று என்று கூறுகின்றனர்.

  19. திருக்குறள் உலகப்பொதுநூல். மனுநூல் ஒருவர்க்கு ஒரு விதமாகவும் மற்றொருவர்க்கு மற்றொரு விதமாகவும் ஓரங்கூறும் வடநூல்.

  20. இசையரங்கு – இசைக்கச்சேரி; இறுதி – கடைசி.
  +++++++++++++++++++++++++++++++++++++++++++

[இதழாசிரியர் குறிப்பு: தமிழ்த்தேசிய இலக்கை உடைய கட்சியினரும் அமைப்பினரும் இந்நூலைத் தங்கள் கொள்கை விளக்க நூலாக அறிவித்து நடைமுறைப்படுத்தலாம்.]