(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 6/17 தொடர்ச்சி)

 

தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 7/17

 

அடையும் எளியவர்கட்(கு) அகமகிழ்ந்தே கொடுக்கும்
கொடையிற் சிறந்தவர்நற் குணத்தமிழர் அம்மானை
கொடையிற் சிறந்தவர்நற் குணத்தமிழ ராமாயின்
படையின்றி அவர்பொருளைப் பறிக்கலாமே அம்மானை
பறித்துபறித்(து) அயலார்கள் பரவினர்காண் அம்மானை       (31)

மருந்தா யினும்தமிழ் மக்கள் பிறர்க்களித்து
விருந்தோம்பும் வேளாண்மை விரும்புபவர் அம்மானை
விருந்தோம்பும் வேளாண்மை விரும்பிமிகச் செய்திடினே
வருந்திப்பின் வறுமையால் வாடாரோ அம்மானை
அவ்வருத்தம் அவர்கட்கோர் அணிகலமாம் அம்மானை       (32)

பொன்னான நம்தமிழர், புல்லிய எண்ணமுடன்
இன்னாமை செய்தார்க்கும் இனிமை செய்தார் அம்மானை
இன்னாமை செய்தார்க்கும் இனிமை செய்தால்
துன்னும் பகைவரினால் துயர்விளையும் அம்மானை
துயர்விளைக்கும் பகைவரினித் துயருறுவார் அம்மானை       (33)

வீரம்

பூரித்துத் தோட்கள் புடைத்திடப் போர்செய்யும்
வீரத்தில் சிறந்தவர்நம் வியன்தமிழர் அம்மானை
வீரத்தில் சிறந்தவர்நம் வியன்தமிழர் எனினிந்நாள்
ஓரத்தில் கைகட்டி ஒதுங்குவதேன் அம்மானை
உளவுசெய்து மாற்றார்கள் ஒதுங்கவைத்தார் அம்மானை       (34)

தாய்மார்களே முன்பு தமிழ்நாட்டில் தம்மிளஞ்
சேய்களைப் போருக்குச் செல்லவிட்டார் அம்மானை
சேய்களைப் போருக்குச் செல்லவிட்டார் எனினின்று
தாய்மார்கள் போரென்றால் தயங்குவதேன் அம்மானை
தயக்கத்தை ஆண்பதரே தந்துவிட்டார் அம்மானை       (35)

– பேராசிரியர் சுந்தர சண்முகனார்

  (ஆக்கம்:  1948)

தொடரும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்புரை :-

32- பிறர்க்கு உதவியதால் உண்டான கேடு தமிழர்கட்கு ஓர் அணிகலமாகும்.
33 – பிறரை மன்னிப்பது தமிழர் நாகரிகம் என்றெண்ணி இனியும் தமிழர்க்குத் துயர்விளைப்போர் இயற்கையால் துயரடைவர்.

34,35- வீரம் செறிந்த தமிழ்மக்களை மயக்கி எதிரிகள் கோழைகளாக்கி விட்டனர். ஆடவரின் அடக்குமுறையால் பெண்டிரும் கோழைகளாயினர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++

[இதழாசிரியர் குறிப்பு: தமிழ்த்தேசிய இலக்கை உடைய கட்சியினரும் அமைப்பினரும் இந்நூலைத் தங்கள் கொள்கை விளக்க நூலாக அறிவித்து நடைமுறைப்படுத்தலாம்.]