(தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் :7 /17 தொடர்ச்சி)

தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 8/17

 

சமயம்

புதுப்புதிய சுவைதன்னைப் புலனாக்கும் தமிழ்மொழிதான்
மதிப்புள்ள சங்கநூல் மாண்புடைய தம்மானை
மதிப்புள்ள சங்கநூல் மாண்பிருக்கப் பித்தான
மதச்சண்டை நம்தமிழில் மண்டியதேன் அம்மானை
மண்டியதவ் ஆரியர்செய் மயக்கத்தால் அம்மானை       (36)

உய்வதனைக் கருதி உயர்ந்திடுநம் தமிழ்முன்னோர்
தெய்வ வணக்கந்தாம் செய்துவந்தார் அம்மானை
தெய்வ வணக்கந்தாம் செய்பவரை இன்றுசிலர்
எய்வதுபோல் கடுமொழியால் எதிர்ப்பதேன் அம்மானை
எதிர்க்கலாம் ஆரியர்கள் ஏய்ப்பதையே அம்மானை       (37)

இயற்கை வடிவுடைய இறைவனை முன்தமிழர்
இயற்கை முறைக்கேற்ப ஏத்தினர்காண் அம்மானை
இயற்கை முறைக்கேற்ப ஏத்தினரே யாமாகில்
செயற்கை முறைபலபின் செறிந்ததேன் அம்மானை
செறிந்தது வடவர்தம் சேர்க்கையால் அம்மானை      (38)

 

கோவில்

காண்டகு பல்வடிவாய்க் காட்சி யளிக்கின்ற
ஆண்டவனுக் கனைவருமே அருங்குழந்தை அம்மானை
ஆண்டவனுக் கனைவருமே அருங்குழந்தை எனிற்சிலரை
ஈண்டுகோயி லில்விடாமல் இழிப்பதேன் அம்மானை
விடாதவரே வெளியேற வேண்டுமினி அம்மானை       (39)

ஆரியர்கள் ஆட்சிசெயும் அரியதமிழ்க் கோயிலெலாம்
சீரியநம் தமிழரைச் சேர்ந்தனவே அம்மானை
சீரியநம் தமிழரைச் சேர்ந்தனவே எனின்தமிழர்
கோரியதோர் உள்ளிடத்தைக் குறுகலமோ அம்மானை
குறுகியினித் தம்முரிமை கொள்ளவேண்டும் அம்மானை       (40)

– பேராசிரியர் சுந்தர சண்முகனார்

  (ஆக்கம்:  1948)

தொடரும்

 

+++++++++++++++++++++++++++++++++++++++++++

குறிப்புரை :-

36,37,38- ஆரியர் கூட்டுறவால் தமிழ் நாட்டில் மதச்சண்டைகளும், செயற்கை வழிபாட்டு முறைகளும் பெருகின. இதனால், தெய்வ வணக்கமே எதிர்க்கப்படும் நிலைமையை அடைந்தது. உண்மையில் தெய்வ வணக்கம் வேண்டா என்பது கருத்தன்று. 

40 – கோயிலுக்குள் தமிழர்கள் புகுந்தாலும், குறிப்பிட்ட ஓரிடத்திற்குச் செல்லக்கூடாதாம். இனி இது முடியாது.

+++++++++++++++++++++++++++++++++++++++++++

[இதழாசிரியர் குறிப்பு: தமிழ்த்தேசிய இலக்கை உடைய கட்சியினரும் அமைப்பினரும் இந்நூலைத் தங்கள் கொள்கை விளக்க நூலாக அறிவித்து நடைமுறைப்படுத்தலாம்.]