தன்னலம்  பெரிதா ? இனநலம்  பெரிதா ?

1.

மனமொழியால் ஒன்றாது மதிமயங்கித்

         தன்னலத்தால்  செயலே செய்வான்

    மானமுமே  இல்லாத  மாக்களிலும்

          கீழான  பிறவி  யாவான்

தனதுநலம்  ஒன்றினையே  தலையாகக்

     கொண்டேதான் வினையே செய்வான்

   தன்னினத்துப் பகைவர்கால் தான்வீழுந்

      தறுதலையன்  தமிழ  னல்லன்

இனம்வாழ்ந்தால் இன்பமுடன் எல்லாரும்

          வாழ்வாரென்  றெண்ண  மற்றே

    இனப்பகையின்  பின்சென்றே  எடுபிடி

          யாய்  இருப்பவனும்  இறந்தோ னாவான்

இனப்பகையை  வீழ்த்துதற்கே  எவ்விழப்பு

         வந்தாலும்  ஏற்று  வாழ்வோன்

     இறந்தாலும்  புடவியிலே இசையுற்றே

           எக்காலும்  வாழ்வோ  னாவான் !

2.

பணம்பதவி  பெறுவதற்கே  பகைவனது

        கால்வீழ்வான்  மானம்  அற்றான்

   பதவியொடு  தேடுபணம்  புடவிவிட்டுப்

          போம்போது  வருத  லுண்டோ ?

மணக்கின்ற  தன்மானம்  மறைந்தாலும்

         வரலாற்றில்  மணக்கும்  நன்றே !

    மரபினமும்  மறக்காது  மலர்தமிழாம்

         பண்பாட்டைக்  கட்டிக்  காக்கும்

உணர்வூற்றம்  என்றாலே  ஒண்டமிழை

           இனநலத்தைக்  காத்த  லாகும்

     உணர்வற்றான்  உலகமதில்  உரிமை

        யுமே  அற்றுள்ள  அடிமை  யாவான்

பிணபோல  வாழ்ந்துலகில்  பீடின்றி

        இருப்பவனும்  தமிழன்  அல்லன்

    பிறங்குகதிர் ஒளியாகிப்  பொதுமைய

      றம் பொங்குவனே தமிழன் ஆவான்!

                   புலவர் பழ.தமிழாளன்,

            இயக்குநர், பைந்தமிழியக்கம்,

                     திருச்சிராப்பள்ளி.