தமிழன்னையே! பொறுத்தருள்! – கவிக்கோ ஞானச்செல்வன்
வாழிதமிழ் அன்னை வாழி!
உளத்தினில் இனிப்பவள் உயிரினுள் தழைப்பவள்
உழைப்பினில் சிரித்து நிற்பாள்!
உலகினர் மகிழவே உயர்தனிச் செம்மொழி
உருவுடன் இலங்கு கின்றாள்!
வளத்தினில் நிகரிலள் வாழ்வினைத் தருபவள்
வடிவினில் கன்னி யாவாள்
வற்றாத நூற்கடல் வளர்புகழ் கொண்டனள்
வாழிதமிழ் அன்னை வாழி!
களத்தினில் வெற்றியே கண்டனள் தமிழர்தம்
கருத்தினுள் நிறைவு பெற்றாள்!
கனவுகள் ஆயிரம் கற்பனைப் பாயிரம்
காணவே அருளு கின்றாள்!
குளத்தினில் தாமரை கோடுயர் இமாலயம்
குன்றாத புகழில் வானம்!
குலவுதமிழ் அன்னையே குறைகளைப்
பொறுத்தருள்
கூட்டுவாய் வாழி நாளும்!
[1980 களில் எமது கவியரங்கத் தமிழ்த்தாய் வாழ்த்து.]
Leave a Reply