தமிழ்க் கவிதை

எதுகையென்ன? மோனையென்ன? கவிதை என்றால்
எழுத்தசையும் சீர்த்தளையும் தேடி சோர்ந்த
பதுங்குவதா? பிதுங்குவதா விழிகள்? இல்லை!
பாவேந்தர் பேரனென்ற ஊக்கத் தோட
மெது மெதுவாய்ப் பயின்றேன்காண் கவிதைப் பாடம
மெய்மறந்தேன் அதன் சுவையில் ஒன்றிப் போனேன்!
இதுவரையில் இலக்கியத்தின் சுவையை நாட
யான்பெற்ற இன்பங்கள் கோடி கோடி!

 
வாழ்வுமெங்கள் வளமுஉயர் தமிழே என்ற
வழங்காத வாயுண்டோ தமிழர் தம்மில்!
ஆழ்கடலில் முத்தெடுத்த களிப்புப் பொங்க
அருந்தமிழர் நாமணக்கும் அமுதப் பாட்டாய
சூழ்புரியும் பாவேந்தர் வரிகள் என்றும்
சுடர்ந்திருக்கும் உண்மையதை மறுப்பாருண்டோ!
யாழ்குழலின் இசையெல்லாம் இணைத்து வார்க்கும்
இன்சுவையின் எல்லைவரை கவிதை செல்லும்!

துறைதோறும் கவிதைகளே இன்பம் சேர்க்கும
தொட்டதெல்லாம் துலக்கமுற ஒளியைப் பாய்ச்சும்
நிறைவான எழுச்சிதரும் வீரப் பாட்ட
நித்திரைகொள் மழலையர்க்குப் பூந்தா லாட்ட
விரைவான வெற்றிகண்டால் பரணி பாட்ட
வீறுபெறு தமிழா நீ அச்சம் ஓட்டு!
மறையாநற் புகழ்சிறக்க வாழ்த்துப் பாட்டு!

  • கவிஞர் க.பெருமாள்

குறிப்பு :

மேற்கண்ட கவிதை கவிஞர் க.பெருமாள் அவர்களால் புனையப்பட்டது. இவர் மலேசிய நாட்டில் பிறந்தவர். இவர் பள்ளி நாட்களில் மாணவர் மணிமன்ற மலரில் தொடங்கி, அறுபதுகளில் யாப்புப் பயின்று தொடர்ந்து கவிதை எழுதுபவர். கவியழகர் என்பது இவரது சிறப்பு அடை. “தமிழ்க்கவிதை” இவர் புனைந்ததில் ஒன்று. இக்கவிதையின் வாயிலாகக் கவிஞர் தமிழ்மொழியில் புனையப்படும் கவிதையின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார். குறிப்பாக யாப்புப் பயின்று எழுதும் கவிதைகளில் உள்ள சுவையினைச் சிறப்பாகக் காண்பித்திருக்கிறார். எடுத்துக்காட்டாக, எதுகை, மோனை, அசை, தொனி ஆகிய சிறப்புகள் தமிழ் கவிதைகளுக்கு மாத்திரமே உண்டு. மேலும், பாரதியின் கவிதைகளைக் கேளாதவர் இல்லைக் காரணம் அவர் கவிதைகள் தமிழ் சுவையயையும் யாப்பும் உடையது. அதுபோக, தமிழ்க்கவிதைகளை மழலைச் செலவங்கள் கூட விரும்பிக் கேட்கும் என்கிறார்.

நன்றி :

மலேசியத் தமிழ்க் கவிதைகள் இணையத் தளம்

மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் கவிதையும் அதன் திறனாய்வும்