Thamizhannai01

உன்னை நாள்தோறும்

மூச்சுத் திணற வைக்கிறார்கள்

இந்த அச்சு அடிப்பாளர்களும்

பத்திரிகைக் காரர்களும்!

எலும்பில்லாத தங்கள் நாக்கையே

ஆயுதமாய்க்  கொண்டு

உன்னை நாள்தோறும்

கொலை செய்யப் பார்க்கிறார்கள்

ஊடகத் தொகுப்பாளர்கள்!

உன்னைக் குற்றுயிரும் குலையுயிருமாகச்

சித்திரைவதைச் செய்வதிலேயே

இன்பம் அடைகிறார்கள்

திரைப்பட நடிக நடிகையரும்

பின்னணிப் பாடகர்களும்!

உன்னை நாள்தோறும்

ஊமைக்காயப் படுத்துகிறார்கள்

பள்ளிப் பிள்ளைகளும் ஆசிரியர்களும்!

பல்கலைக் கழகப்  பேர்வழிகளோ

உன்னை மானபங்கப் படுத்த

முயற்சி செய்கிறார்கள்,

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்!

தமிழ்த்தாயே!

இத்துணை

இன்னல்களுக்குப் பிறகும்

இன்னும் …. நீ ….

உயிரோடும்

உயர்வோடும்

உலா வருகிறாயே!

ஓ….

உன் ஆற்றல் …..

அது

வணங்கத் தக்கது தான்!

prof.Maraimalai Ilakkuvanar02 – தலைகீழ் – புதுக் கவிதைகள் தொகுப்பு (1981)