தமிழ்த்தாய்க்கு யார் ஆறுதல் சொல்வது? – மறைமலை இலக்குவனார்
தமிழ்த்தாய்க்கு யார் ஆறுதல் சொல்வது?
தமிழ்ச்சொற்களெல்லாம்
தேம்பித்தேம்பி அழுகின்றன.
சொற்களுக்கும் பொருள்களுக்கும்
சோடிப்பொருத்தம் பார்த்துச்
சோடித்துவைத்த கவிஞர் மறைந்துவிட்டார்.
அவர் உருவாக்கிய
கவிதைகளெல்லாமே
காமதேனுக்கள்.
கேட்ட பொருளும் கேட்காத பொருளும்
நினைக்கும் பொருளும்
நினைக்காத பொருளும்
வாரிவாரி வழங்கும் வள்ளற்பசுக்களாக
அவர் படைத்த கவிதைகள்
வரலாறு படைத்துக்கொண்டிருக்கின்றன.
அந்தப் படிமச்சிற்பியின்
படிமப்பட்டறை இழுத்து மூடப்பட்டுவிட்டதே!
உயிர்த்துடிப்பு மிக்க படிமச்சிற்பங்களைப் படைத்து
உலகெல்லாம் உலாவரச்செய்த அவருடைய
ஆற்றலைக்கண்டு
தேவலோகத்து மயன் தற்கொலை செய்த கதை பழங்கதை.
அவர் மேடையேறிய கவியரங்குகளெல்லாமே
இலக்கிய ஆர்வலர்களுக்குத்
தீபாவளித்திருநாளாகத் திகழ்ந்தன.
மேடையேறி அவர் கொளுத்திப் போடும்
சரவெடிகள் எட்டுத்திசைகளிலும் முழங்கி
எழுச்சியும் ஊக்கமும் வழங்கின.
பேனாவைத் தமது ஆறாம் விரல் என அறிவித்த
ஒரே படைப்பாளி அவர்தானே?
அவர் இரண்டாம் கருவறை எனப் போற்றிய
தியாகராசர் கல்லூரியில் நானும் உருவாகியவன் என்பதால்
நானும் அவருக்குச் சகோதரன்தான்,
நா.காமராசு, இன்குலாபு என்னும் சகோதரர்களின்
அடுத்தடுத்த பிரிவு
அவரைக் கலங்கச் செய்துவிட்டதோ?
இளையராசாவின் இசையரங்கங்களுக்குத்
திரளும் பெருங்கூட்டம்போல்
கவியரங்கங்களுக்கு மக்கள்கடல்
திரண்டுவந்தது இவரால்தான்
அலையெழுப்பும் ஆரவாரமாய்
ஆர்வலர்களின் கையொலிமுழக்கம்
விலைமதிப்பற்ற முத்துக்களாய் இவருடைய கவிதைகள்
‘நேயர் விருப்பம்’நெஞ்சை கவர்ந்தது
‘பால்வீதி’ புரியவில்லையே
எனும் குழப்பம் நிலவிய காலம் உண்டு;
இருளிலே மூழ்கிய கண்கள்
வெளிச்சம் கண்டால் கூசுமே
பார்வையை மருட்டுமே
அதனைப் போன்று
இவருடைய கவிதையின் ஒளிச்சுடர்
பார்வையை மருட்டியது;
பழகியபின் பார்வையும் விரிந்தது;
பயின்று கற்றவரின் அறிவும் விரிந்தது;
அரசியல் பதவிகளுக்கும் ஆசைப்படாமல்
திரைப்படக் கவிதை வாய்ப்புகளுக்கும் இசைவுதராமல்
கவிஞராகவே வாழ்ந்தவர்;
திறனாய்வுகளை மனதார வரவேற்றவர்;
அவரும் நானும் கலந்துகொண்ட ஓர் இலக்கிய அரங்கில்
நான் மொழிந்தது:
“அப்துல் இரகுமானுக்கு முன்பும் புதுக்கவிதை இருந்தது;
ஆனால் அப்துல் இரகுமான் இல்லாமல் புதுக்கவிதை இல்லை”
புன்முறுவலோடு அவர் இதனை ஏற்றார்.
நீங்களும் ஏற்றுக் கொள்வீரகளல்லவா?
நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக்கொள்ளவேண்டும்.
கவிதையுலகின் தலைமகனை இழந்துவாடும்
தமிழ்த்தாய்க்கு யார் ஆறுதல் சொல்வது?
முனைவர் மறைமலை இலக்குவனார்
52/3சௌந்தரியா குடியிருப்பு,
அண்ணாநகர் மேற்கு விரிவு,சென்னை-600101
9445407120
Leave a Reply