தலைப்பு-தமிழ்ப்பொங்கல் : thalaippu_thamizhpongal_kannansekar

தமிழ்ப்பொங்கல் – ப.கண்ணன்சேகர்

மண்ணில் பசுமை நிலவிட
மணக்கும் தமிழால் குலவிட
மாநிலம் மாறிட நல்லது!

நல்லது நினைத்து வேண்டிட
நாளைய உலகை தூண்டிட
நன்மை செய்வாய் இக்கணம்!

இக்கணம் எழுதும் வரிகளே
இயம்பும் வாழ்வின் நெறிகளாய்
இனிமைக் காணச் செய்திடும்!

செய்திடும் ஒற்றுமை நட்பாக
சேர்ந்தே வாழ்வீர் வளமாக
செழித்தே ஓங்கும் வையகம்!

வையகம் முழுமை தமிழாக
வைத்திடு தாய்மொழி அமுதாக
வந்திடும் தமிழ்தைப் பொங்கல்!

பொங்கல் இல்லா நல்மனமே
புழுங்கல் இல்லா ஒருகுணமே
போற்றும் தமிழர் பன்பாடு!

பன்பாடு காக்கும் நன்நாளே
பாரினில் சிறந்த திருநாளே!
பைந்தமிழ் காட்டிய அடிச்சுவடு!

அடிச்சுவடு ஒட்டி வாழ்ந்திடு
அறமே செய்ய விரும்பிடு
அதுவே உண்மைத் தமிழ்ப்பொங்கல்!

ப.கண்ணன்சேகர்

9698890108