(தமிழ் வளர்கிறது 1-3  தொடர்ச்சி)

தமிழ் வளர்கிறது! 4-6 

எழுச்சியும் ஆர்வத் தீயும்

என்னுளே எழுந்து பொர்ங்கக்

கிளர்ச்சிசெய் வாரைக் கூடிக்

கிடந்திடும் அந்தப் போதில்

தளர்ச்சிநான் உற்றே னென்றால்

தனிவியப் படைவீர், அந்த

வளர்ச்சியின் நிலையைக் கண்டால்

வடிந்திடும் கண்ணி ரன்றே !

 

தமிழினை வளர்ப்போ மென்றும்

தமிழர்நா டடைவோ மென்றும்

அமிழ்தென மொழிவோ ரெல்லாம்

அவரவர் கொள்கை கொண்டு

சுமைசுமை யாகத் தீமை

தோற்றுவித் திடுதல் கண்டேன்.

அமைந்திடும் தமிழர் நாட்டுக்

கவர்பணி வேண்டாம்! வேண்டாம் !

 

சொல்லழகு மனம்பறிக்கப் புலவன் பாட்டுச்

சுவையறிந்து பரிசளித்துத் தமிழ்வ ளர்த்த

நல்லதமிழ் மன்னர்வழிப் பிறந்தி ருந்தும்

நாடாளும் அமைச்சர்களாய் வீற்றி ருந்தும்

மெல்லமெல்லப் பிறமொழியைத் திணிப்ப தற்கு

மேலுதவி செய்துவரும் போக்கைக் கண்டு

நல்லவர்கள் மனம்வருந்தப் புல்ல ரெல்லாம்

நன்மைவந்த தெனக்களித்துக் குதிக்கின் றாரே !

(தொடரும்)

பாவலர் நாரா. நாச்சியப்பன்:

தமிழ் வளர்கிறது