தலைப்பு-தமிழ்வாழும் அன்றே, பெருஞ்சித்திரனார் ; thalaippu_thamizhvaazhum_perunchithiranar

‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது:
தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது! !
தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டும்
கொக்கரிப்புப் பேச்சாலும் தமிழ் வாழாது !
ஆர்த்தெழும் உள் உணர்வெலாம் குளி ருமாறே
இமிழ் கடல்சூழ் உலகமெலாம் விழாக்கொண் டாடி
ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே !

பட்டிமன்றம் வைப்பதினும் தமிழ்வா ழாது:
பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது:”
எட்டி நின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை
எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி நாலும்,
தட்டி, சுவர் ,தொடர்வண்டி, உந்துவண்டி
தம்மிலெல்லாம் “தமிழ் தமிழ்’ என்றெழுதி வைத்தே
முட்டிநின்று, தலையுடைத்து முழங்கி னாலும்
மூடர்களே, தமிழ்வாழப் போவதில்லை !

செந்தமிழ்செய் அறிஞர்களைப் புரத்தல் வேண்டும்
செப்பமொடு தூய தமிழ் வழங்கல் வேண்டும்:
முந்தைவர லாறறிந்து தெளிதல் வேண்டும்:
முக்கழக உண்மையினைத் தேர்தல் வேண்டும்;
வந்தவர்செய் தீங்குகளால் தமிழர்க் குற்ற
வரலாற்று வீழ்ச்சிகளை எடுத்துக் கூறி,,
நொந்தவுளஞ் செழித்ததுபோல் புதிய வையம்
நோக்கிநடை யிடல்வேண்டும் ! தமிழ்தான் வாழும் !

தண்டமிழில் பிறமொழியைக் கலந்து பேசுந்
தரங்குறைந்த தமிழ் வழக்கை நீக்கல் வேண்டும் !
தொண்டரெலாந் தெருக்களிலே கடைகள் தோறும்
தொங்கு கின்ற பலகைகளை மாற்றச் சொல்லிக்
கண்டு நிகர் தமிழ்ப் பெயர்ப்பால் புதுக்கல் வேண்டும் !
கற்கின்ற சுவடிகளில், செய்தித் தாளில்,
விண்டுரைக்கா அறிவியலில், கலையில் எல்லாம்
விதைத்திடுதல் வேண்டும் தமிழ் வாழும் அன்றே !

-பாவலரேறு பெருஞ்சித்திரனார்