தமிழ் வாழ்க நாளும் – நாமக்கல் கவிஞர்வெ.இராமலிங்கம்(பிள்ளை)
தமிழென்று தருகின்ற தனியந்தப் பெயரில்
அமிழ்தென்று வருகின்ற அதுவந்து சேரும்.
நமதிந்தப் பெயர்கொண்ட மொழியென்ற எண்ணம்
தமிழர்க்குப் புகழ்மிக்கத் தருமென்றல் திண்ணம். 1
பயிருக்கு நீர்என்ற பயன்மிக்க வழியே
உயிருக்கு வெகுநல்ல உணர்வுள்ள மொழியே.
துயருற்ற மனதிற்குத் துணைநின்றே உதவும்;
அயர்வற்ற ஞானத்தை அடைவிக்கும் அதுவே. 2
அன்பென்று அதைமிக்க அறிவிக்க நின்று
துன்பங்கள் தருகின்ற துயரத்தை வென்றே
இன்பத்தின் நிலைசொல்ல இணையற்ற வழியாம்;
தென்புள்ள தமிழென்று திகழ்கின்ற மொழியாம். 3
அருளென்ன உலகத்தின் அறிவாள ரெல்லாம்
பொருள்கொள்ளும் பொருள்தன்னைப் புரிவிக்கும் சொல்லாம்;
இருள்கொண்ட உள்ளத்தில் இயல்பான பழியைத்
தெருள்கொள்ள ஒளிதந்து திகழ்கின்ற மொழியே. 4
அறிவென்று பெயர்கொண்ட அதைமட்டும் நாடும்;
குறிகொண்டே உலகெங்கும் குறைவின்றித் தேடும்;
வெறிகொண்ட இனம்என்று வெகுபேர்கள் போற்றும்
நெறிகொண்ட தமிழ்மக்கள் நிறைகண்ட மாற்றம். 5
கலையென்ற கடலுக்குக் கரைகண்ட புணையாம்
நிலைகொண்ட அறிவுக்கு நிகரற்ற துணையாம்;
அலைபட்ட மனதிற்கு அமைதிக்கு வழியாம்;
மலையுச்சி ஒளியன்ன மறைவற்ற மொழியாம். 6
அறமன்றிச் செயலொன்றும் அறியாத மொழியாம்;
மறமென்ற செயல்என்றும் மதியாத மொழியாம்;
நிறமென்று மதமென்று நிந்தித்தல் அறியாத்
திறமுள்ள தமிழென்று திசைமெச்சும் நெறியாம். 7
குணமென்ற அதைமட்டும் கும்பிட்டு நாளும்
பணமென்ற பலமென்ற பயமின்றி வாழும்
இணையற்ற உறுதிக்கு இசைமிக்க வழியாம்
மணமிக்க தமிழென்று மதிமிக்க மொழியாம். 8
பலகாலம் பலநாடும் பரிவோடு சுற்றி
உலகோரின் பலசொல்லை உறவோடு கற்று
விலகாத நட்பிற்கு வெகு கெட்டி வேராம்;
தலையாய அறிவிற்குத் தமிழென்று பேராம். 9
எந்தெந்த நாட்டின்கண் எதுநல்ல தென்றே
அந்தந்த மொழிதந்த அறிவின்கண் நின்று
முந்துள்ள இவையென்ற முறையுள்ள எல்லாம்
தந்துள்ள தொகைபோலும் தமிழென்ற சொல்லாம். 10
விரிகின்ற அறிவோடு விரிகின்ற நிலையால்
திரிகின்ற உலகத்தைத் தெரிகின்ற கலையால்
சரியென்ப தொன்றன்றிப் பிறிதொன்றில் சலியாப்
பெருமைத்து தமிழென்ற பெயர்தந்த ஒலியாம். 11
சீலத்தை இதுவென்று தெரிவிக்கும் நூலாம்;
காலத்தைத் தூரத்தைக் கருதாது மேலாம்
ஞாலத்தை அண்டத்தை நாமாக எண்ணும்
மூலத்தின் உணர்வெங்கள் மொழி உண்டு பண்ணும். 12
பிறநாடு பிறர்சொத்து பிறர்சொந்தம் எதையும்
உறநாடிச் சதிசெய்தல் உன்னாத மதியும்
இரவாமல் எவருக்கும் ஈகின்ற நயனும்
அறமோதும் தமிழ்கற்று அடைகின்ற பயனாம். 13
விஞ்ஞானம் அதனோடும் விளையாடி நிற்கும்;
மெய்ஞ்ஞானம் அதைமட்டும் மிகநாடி கற்கும்;
மெய்ஞ்ஞானம் வாதித்துப் புனிதத்தை இகழும்
அஞ்ஞானம் இல்லாமை அதுபெற்ற புகழாம். 14
கொல்லாமை பொய்யாமை எனுமிவ்விரண்டில்
எல்லாநல் அறமுற்றும் இடைநிற்றல் கண்டு
சொல்லாலும் செயலாலும் மனதாலும் தொழுதோர்
நல்லோர்கள் பணிதந்த தமிழ்வாழ்க நாளும். 15
குறிப்புரை:- பணி – சொல், வார்த்தை (15);
‘மெய்ஞ்ஞானம்‘ எதிர்சொல் அஞ்ஞானம் (14);
இணையற்ற – தனக்கு நிகரில்லாத (8);
இரவாமல் – ஒளிக்காமல், மறைக்காமல்
Leave a Reply