தலைப்பு - திருவோடு, கோ.மன்றவாணன் : thalaippu_thiruvottaiyum_parithu

திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்!

விரலில்

கருப்பு மை வைக்கும்போதே

தெரியவில்லையா…

நம்நாடு

நம்மக்களை

நம்பவில்லை என்று!

நாங்கள்

ஆட்சிக்கு வந்தால்

அனைத்தும் தரும்

அட்சயப் பாத்திரம் ஆவோம்

என்பவர்கள்…

தேர்தலுக்குப் பிறகு

எங்கள்

திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்!

விதிமீறல்களை

வேடிக்கை பார்ப்பதற்கென்றே

உருவாக்கப்பட்ட

ஓர் அமைப்புதானோ

தேர்தல் ஆணையம்.

எல்லாரும்

இந்நாட்டு மன்னர்கள் என்பது

கனவு சனநாயகம்.

மந்திரிகள் மட்டுமே

மன்னர்கள் ஆவது

நவீன சனநாயகம்!

ஊழலில் சிதறிய

ஒரு சொட்டே

வெள்ளமாய்ப் பாயும்

விந்தையைப் பார்க்கலாம்

தேர்தல்

திருவிழாவில் மட்டுமே!

பணம் வாங்கி

வாக் களித்த

நம் மக்களுக்கு

அரசியல்வாதிகளைக் குற்றம்சொல்ல

அருகதை இல்லையாமே!

வாக்குரிமை

மட்டுமே கொண்ட

எங்கள் மக்களில் சிலர்,

சாக்கடைப் பன்றிகளோடு

சண்டையிட்டு

எச்சிலையை வழிக்கிறார்கள்.

தேர்தல் அகராதியில்

இல்லாத ஒருசொல்

‘நேர்மை’

எத்தனை தேர்தல் வந்தாலும்

எத்தனை ஆட்சி மலர்ந்தாலும்

ஏழைகள் வாழ்வது மட்டும் ஏனோ

கண்ணீரில்….!

                                       –கோ. மன்றவாணன்

கவிதைமணி, தினமணி 17.11.2015

முத்திரை, கவிதைமணி : muthirai_kavithaimani_logo