தலைப்பு + தேராச்செய்வினை தீராத இன்னல் தரும் + பழ.தமிழாளன்

தக்கவர்க்கு வாக்களிப்பீர்

தேராச் செய்வினை தீராத  இன்னல்  தரும் !

1

சீரார்க்கும்   எண்ணமுடன்  திகழ்கதிராம்

               எழுச்சிநிறை  உணர்வே  பெற்றுச்

    செந்தமிழை  இனம்நாட்டை நெஞ்சகத்தே

        வைப்பவரைத்  தேரல்   வேண்டும் !

தேராதே  கட்சியையும்  தேர்தலிலே  நிற்ப

                         ரையுந்  தேர்ந்தெ  டுத்தால்

      தீராத  இன்னலையே  இருகையால்

        வணங்கியுமே  அழைத்தல்   ஒக்கும் !

கூரான வாளெடுத்துக் கூடியுள்ள தம்முயி

                             ரைச்   செகுத்தல்  போல

      குடியாட்சி  மாண்பழிக்கும்  கட்சிக்கே

               வாக்கினையே  அளிப்போ  மாயின்

ஏரார்த்த  தமிழ்மரபும்  எழிற்றமிழும்  பண்

                                       பாடும்  நாடும்   வீழும் !

     என்றென்றும் தமிழறமும் இனமொழியும்

                       நிற்கதமிழ்ப்   பற்றார்   தேர்க !

2.

தேர்தலுமே  வந்துவிட்டால்  திருக்குறளைச்

                     செந்தமிழைக்  காப்பார்  போல

      தேராதே  நெஞ்சகத்தில்  திகழ்கின்ற

                      உதட்டினிலே   ஒட்ட  வைப்பர் !

பார்முதலாம்  செந்தமிழைப்  பரப்புதற்கே

                           ஆக்கமதை  ஆளும்  போது

   பணமொதுக்கித்  திட்டமிடும்  எண்ண

    மில்லார் கூறுவதும் பொய்யே பொய்யே!

சீர்தூக்கிப்  பார்த்தாலே  செப்புகின்ற

               அத்தனையும்  முரணே  ஆகும் !

     தன்மானம்  பகுத்தறிவு  தன்னிரண்டு

              கண்ணென்னும்  தமிழ  ரெல்லாம்

தேர்தலுரை  அத்தனையும் சேர்ந்தொன்றிச்

         செயலாற்றும் உரையாய்க் கொள்ளார்

   தேர்தலிலே உரைத்தவற்றை இதற்குமுன்

                 னே செய்தாரா ? !  தீயே ! ஒப்பார் !

  புலவர் பழ.தமிழாளன்,

               இயக்குநர்—பைந்தமிழியக்கம்,    திருச்சிராப்பள்ளி