நம்மொழியை நாமறிவோம்! – பாவலர் கருமலைத்தமிழாழன்
நம்மொழியை நாமறிவோம்!
இத்தாலி நாட்டிலிருந் திங்கே வந்து
இயேசுபிரான் கருத்துகளைப் பரப்பு தற்கே
முத்தான தமிழ்மொழியைப் பேசக் கற்று
முதலில்தம் பெசுகியெனும் பெயரை மாற்றித்
தித்திக்க வீரமா முனிவ ரென்று
திருத்தமுறத் தமிழினிலே சூட்டிக் கொண்டு
வித்தாகக் கிறித்துவத்தை விதைப்ப தற்கே
வீதிகளில் மதக்கருத்தை உரைத்து வந்தார் !
ஓரிடத்தில் உரையாற்றும் போது பேச்சில்
ஒருகோழி தன்னுடைய குட்டி தன்னைப்
போரிட்டுக் காப்பதைப்போல் என்றே உவமை
பொருத்திச்சொல்லக் கேட்டமக்கள் சிரித்து விட்டார்
கூறியதில் தவறேதோ உள்ள தென்று
கூட்டத்தைப் பார்த்தவரும் கேட்கும் போது
சீரியசெந் தமிழினிலே மரபுச் சொற்கள்
சிறந்தபொருள் தருமென்றார் கூட்டத் தார்கள் !
குஞ்சென்று சொல்வதுவே மரபு என்ற
குறிப்புணர்ந்து முழுமையாகத் தமிழைக் கற்று
விஞ்சுமொரு காப்பியத்தைப் படைப்பேன் என்றே
வியக்கின்ற தேம்பாவணி படைத்த ளித்தார்
கொஞ்சுதமிழ்ப் பெருமையினை மேலை நாட்டார்
கொண்டாடிப் புகழநாமோ சிறுமை செய்தே
தஞ்சமெனப் பிறமொழிக்கே அடிமை யாகித்
தாய்கழுத்தை நெரிக்கின்றோம் அறிவு மின்றி !
( தமிழ் வளர்த்த இத்தாலிய பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 8, 1680. அவரைப் போல் தமிழை வளர்ப்போம் நாமும் )
Leave a Reply