பசியும் கிருமியே!

 

மகுடை

கொடிய கிருமிதான் தொற்றுமுன்னே

தொல்லைகள் ஆயிரம்

 

தனிமைப் படுத்தப் படுவதே பெரிய தண்டனை

முடங்கிக் கிடக்க சொல்வது முழு தண்டனை

அடைந்து கிடக்க சொல்வது ஆயுள் தண்டனை

 

நடுவண் அரசு நகராதே என்றது

மாநில அரசு வழி மறித்தது

வணிக உலகம் வாடியது

தொழில்துறை தூங்கியது

 

பசி மட்டும் தீராமல்

பஞ்சப்பாட்டு பாடியது.

அடுத்த வேளை உணவின்றி

வெறும் கையைத் தட்டி

ஓலமிட வேண்டா என்று ஓசை எழுப்பச் சொன்னது

 

மணியாட்டி க் கொண்டிருக்கிறோம்

மக்களா இல்லை மாக்களா…?

 

இறந்தபின்னே

தனிமை படுத்தப்படும் பிணங்களைப் போல

இருக்கும்போதே தனிமைப்படுத்தப்பட்டு விட்டோம்

 

பசியைக் கெடுக்கும்

கிருமியிருந்தால் 

பரப்பி விடுங்கள்.

பாவம் ஏழைகளின் துயர் தீரட்டும்

 

ஊரடங்கு உத்தரவால் உள்ளிருப்புப் போராட்டம் 

வயிற்றுக்குள் பசி

 

மகுடை கொன்று தீர்க்குமோ இல்லையோ

மடியச்செய்யும் கொலைப் பட்டினி

பட்டினிச்சாவு 

பசியும் கிருமியே!

ஆற்காடு க. குமரன்
9789814114