பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 4
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 4
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்:3 காட்சி:3 தொடர்ச்சி)
அரண்மனை – அந்தப்புரம் பூஞ்சோலை
இளவரசி அமைதியாக வீற்றிருக்க, தோழியர் வந்து சூழ்ந்து நகையாடலாக உரையாடுகின்றனர்.
அறுசீர் விருத்தம்
தோழி 1 : தங்கநீர் ஓடை தன்னில்
தறுகண் முதலை ஏறி
எங்குளான் பகைவன் என்றே
இளவீரன் செல்லும் பான்மை
பொங்கிடும் ஒளிவெள் ளத்தில்
புலப்படும் மேகக் காட்சி
அங்குறும் மேற்கு வானில்
அசைந்திடும் அழகு தானும்
தளர்நடை யிட்டுத் தாவித்
தாய்மடி நோக்கிப் பாயும்
இளமான் கன்று காட்டும்
எழிலதும் காணா தீங்கே
தளையவிழ் மொட்டு சுற்றித்
தவித்திடும் சுரும்பு போல
இளையாய் தலைவி நீதான்
ஏங்கிட என்ன வுண்டு
எண்சீர் விருத்தம்
தோழி 2 : மங்கலமே மனைமாட்சி
அவளே நல்ல
மனையதற்கு விளக்காவாள்
என்று சொல்லும்
சங்கத்தார் பாடல்கள்
கற்றுத் தேர்ந்த
சங்கையிலா இளவரசி
கைபி டிக்க
பொங்குதமிழ் வல்லவராய்ப்
புலமை யாளர்
பொருள்சிறக்க அழகூட்டும்
செஞ்சொற் போல
எங்கிருந்தும் வரவேண்டும்
என்று கூறும்
இளங்கிள்ளைப் பேச்சைத்தான்
மறுப்ப தாக
கொடிதழுவக் கொழுகொம்பே
வேண்டும் பட்டை
வயிரத்தை மலர்தன்னில்
பதிக்கற் பாற்றோ
அடிநோக்கி வாழ்கின்ற
குடியைக் காக்க
அடலேறாய் வாள்சுழற்றும்
வீர னன்றோ
தொடியாளைக் காக்கின்ற
துணைவ னாக த்
துகள்செய்யும் தேரேறி
வருவா னென்றே
நெடிதாகப் புறவினமுங்
கூவ மந்தி
நடுவராக இருபுறமுந்
தலைய சைக்க
தோழி 3 : சுவையான பட்டிமன்ற
வாதந் தன்னில்
சொற்சுவையும் பொருட்சுவையும்
ஆராய் கின்ற
அவையோராய் வான்கோழிக்
குரல்எ ழுப்ப
அருமைமிகு காட்சியினைக்
காணா தீங்கே
கவையூடு பாய்ந்தோடி
மானுந் தப்பக்
கவலையுடன் நின்றிருக்கும்
புலியைப் போல
எவையெண்ணி இருக்கின்றாய்
நங்காய் நீதான்
எங்களிடம் அந்தமறை
இயம்ப லாமோ
தோழி 4 : கண்டாலே உயிர்தளிர்க்கும்
அமுத மாகக்
கன்னிநீயும் இங்கிருக்க
அந்தத் தேவன்
உண்டாலே உயிர்தளிர்க்கும்
அமுதம் மாந்தி
உரும்பருலகம் எத்தனைநாள்
இருப்பான் அனிச்சச்
செண்டாலே யாமசைக்கும்
தென்றல் மேவச்
செழும்பஞ்சில் கண்வளரும்
நங்காய் தூக்கும்
தண்டாலே பகையொடிக்கும்
வீம னாகத்
தார்வேந்தன் வந்திடுவான்
கவலை வேண்டாம்
இசைப்பாடல்
அமுதவல்லி : போங்கடிப் போங்கடிப் பெண்டுகளா
பொல்லாத் தனம் பேசும் செண்டுகளா
மன்மத மயக்கத்தில்
மனசுக்குள் கிறக்கத்தில்
கனவுகள் பலவாகக்
களித்திடும் நினைவாக
என்மேலே பழிபோட்டு
ஏகடியம் பேசுகிற
இளவட்டக் குட்டிகளா
இணைதேடும் சிட்டுகளா
– போங்கடி…
தோழியர் : வாங்கடி வாங்கடிப் பெண்டுகளா
வம்புத் தனம் பேசும் செண்டுகளா
வாலைக் குமரியாம்
வாழ்வேந்தன் பொன்மகளாம்
காளையர் பலபேரைக்
கனவிலே வதைப்பவளாம்
ஏழைநமை வாழ்விக்கும்
இளவரசி நெஞ்சத்தில்
மன்மதன் யாரடி
மைபோட்டுப் பாருங்கடி
– வாங்கடி. . .
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி
Leave a Reply