பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 5
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 4 தொடர்ச்சி)
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி:
களம் : 3 காட்சி : 5
சோலை மேடை. ஒருபால் காத்திருக்கும் உதாரன் நிலவைக் கண்டு பாடத் தொடங்கிய வேளை, அமுதவல்லி மறுபுறம் வந்து வியந்து நிற்கிறாள்
எண்சீர் விருத்தம்
உதாரன் : நீலவான் ஆடைக்குள்
உடல்ம றைத்து
நிலவென்று காட்டுகிறாய்
ஒளிமு கத்தைக்
கோலமுழு துங்காட்டி
விட்டால்காதற்
கொள்ளையிலே இவ்வுலகம்
சாமோ வானச்
சோலையிலே பூத்ததனிப்
பூவோ நீதான்
சொக்கவெள்ளிப் பாற்குடமோ
அமுத ஊற்றோ
காலைவந்த செம்பருதிக்
கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த
ஒளிப்பிழம்போ
அந்தியிரு ளாற்கருகும்
உலகு கண்டேன்
அவ்வாறே வான்கண்டேன்
திசைகள் கண்டேன்
பிந்தியந்தக் காரிருள்தான்
சிரித்த துண்டோ
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ
நிலவே நீதான்
சிந்தாமல் சிதறாமல்
அழகை யள்ளிச்
சேகரித்துக் குளிரேற்றி
ஒளியும் ஊட்டி
இந்தாவென் றேஇயற்கை
யன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்தரித்த
வண்ணந் தானோ?
உனைக்காணும் போதினிலே
என்னுள் ளத்தில்
ஊறிவரும் எழுச்சியினை
எழுது தற்கு
நினைத்தாலும் வார்த்தைகிடைத்
திடுவ தில்லை
நித்தியத ரித்திரராய்
உழைத்து ழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப்
பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால்
பானை யாரக்
கனத்திருந்த வெண்சோறு
காணு மின்பம்
கவின்நிலவே உனைக்காணும்
இன்பந் தானோ?
உன்னைஎன திருவிழியாற்
காணு கின்றேன்
ஒளிபெறுகின் றேன்இருளை
ஒதுக்கு கின்றேன்
இன்னலெலாம் தவிர்க்கின்றேன்
களிகொள் கின்றேன்
எரிவில்லை குளிர்கின்றேன்
உள்ளும் புறமும்
அன்புள்ளம் பூணுகின்றேன்
அதுவு மன்றி
ஆகாயம் அளாவுமொரு
காதல் கொண்டேன்
இன்பமெனும் பால்நுரையே
குளிர்வி ளக்கே
எனையிழந்தேன் உன்னெழிலில்
கலந்த தாலே
சிந்து கண்ணி
அமுதவல்லி (தனக்குள்) : அவ்வறிஞன் கவிவல்லவன் – விழி
அற்றவனாயின் நிலாவினை
எவ்விதம் பார்த்தனன் பாடினன் –இதில்
எத்துக்கள் ஏதுமுண்டோ
(மறுபுறம் ஓடி, உதாரனைக் கண்டு, தனக்குள்)
ஏதிது போன்றஓ ராண்எழில் – குறை
இன்றித் திருந்திய சித்திரம்
சோதி நிலவுக்கும் மாசுண்டாம் – இச்
சுந்தரனோ கறைஒன்றிலான்
உதாரன் : என்ன வியப்பதுவானிலே – இருந்
திட்ட மாமதி மங்கையாய்
என்னெதிரே வந்து வாய்த்ததோ – புவிக்
கேதிது போலொரு தண்ணொளி
மின்னற் குலத்தில்விளைந்ததோ- வான்
வில்லின் குலத்தில் பிறந்ததோ
கன்னல் தமிழ்க்கவி வாணரின்
கற்பனையே உருப் பெற்றதோ
பொன்னின் உருக்கிற் பொலிந்ததோ – ஒரு
பூங்கொடியோ மலர்க்கூட்டமோ
இன்னதென்றே நான்அறிந்திலேன் – நீ
யாரென்றே எனக்கியம்புவாய்
அமுதவல்லி : அமுதவல் லியும்நா னன்றோ – அந்த
அமைச்சனும் முடிவேந்தனும்
நமைப்பிரித் திடும்எண் ணத்தால் – உன்னை
நாட்டமில் லாதவன் என்றனர்
சமுசயப் படநீயின்று – மதி
தரிச னமதைப் பாடினை
கமலங் கள்எனுங் கண்ணுடன் – உனைக்
காணப் பெற்றதென் கண்களே
எண்சீர் விருத்தம்
உதாரன் : இன்னொன்று கேளாயோ
அமுத வல்லி
என்னிடத்தில் உன்தந்தை
என்ம கட்கு
முன்னொன்று தீவினையால்
பெருநோய் வந்து
மூண்டதெனச் சொல்லிவைத்தான்
அதனா லன்றோ
மின்னொன்று பெண்ணென்று
புவியில் வந்து
விளைந்ததுபோல் விளைந்தஉன்
அழகு மேனி
இன்றுவரை நான்பார்க்க
எண்ண வில்லை
எழில்நிலவு சூழ்ச்சியிருள்
கிழித்த தன்றோ
காரிருளால் சூரியன்தான்
மறைவ துண்டோ
கறைச்சேற்றால் தாமரையின்
வாசம் போமோ
பேரெதிர்ப்பால் உண்மைதான்
இன்மை யாமோ
பிறர்சூழ்ச்சி செந்தமிழை
அழிப்ப துண்டோ
நேரிருத்தித் தீர்ப்புரைத்துச்
சிறையிற் போட்டால்
நிறைதொழிலா ளருணர்வு
மறைந்து போமோ
சீரழகே தீந்தமிழே
உனைஎன் கண்ணைத்
திரையிட்டு மறைத்ததுவும்
விந்தை யன்றோ
அமுதவல்லி : நன்றெண்ணக் கேடாதல்
நாடடி லுண்டு
நலிவெண்ணி இவர்நம்மை
இணைத்து வைத்தார்
நின்றிருக்கும் நீள்கொம்பைத்
தாவிச் சுற்றல்
நெடும்புவியில் கொடிக்குள்ள
இயற்கை யன்றோ
மன்றத்தில் தமிழ்கேட்டு
மகிழ்ந்தி ருந்தேன்
மனக்கதவம் உமக்காகத்
திறந்தி ருந்தேன்
குன்றொத்த தோள்கண்ட
கணநே ரத்தில்
குடியேறிக் கொலுவிருந்தீர்
நெஞ்சுக் குள்ளே
கானத்தில் குயிலோசை
கூடா தென்றே
கட்டளையை யிட்டாலும்
யார்ம திப்பார்
ஈனத்தால் எதிரினத்தார்
தமிழ ழிக்க
இருக்கின்றார் ஆனால்நாம்
விடுவோ மில்லை
நாணத்தில் முகஞ்சிவத்தல்
குற்ற மென்றே
நங்கையரை யார்தடுப்பார்
நானி லத்தே
கூனலான மதியுடையார்
பிரித்து வைத்தார்
குறையில்லா முழுமதியும்
இணைத்த தன்றோ
பஃறொடை வெண்பா
வானத்தை வெண்ணிலா
வந்து தழுவுவதும்
மோனத் திருக்கும்
முதிர்சோலை மெய்சிலிர்க்க
ஆனந்தத் தென்றல்வந்
தாரத் தழுவுவதும்
நானோக்கி நோக்கி
நலிவதனைக் காணாயோ
சித்தரித்த ஆணழகே
சென்றுபடர் முல்லையினைக்
கத்தரித்த லின்றிக்
கரந்தழுவும் மாமரமும்
சத்தமிட்ட வண்டு
தடாகத்தின் அல்லியினை
முத்தமிட்டுத் தேன்குடிக்கும்
நல்ல முடிவும்
உணர்வுகளை உண்டாக்க
வில்லையோ உன்பால்
தணலைத்தான் வீசுகிறான்
சந்திரனும் என்மேல்
குணமுள்ளார் கொஞ்சவரும்
கோதையரைக் காதல்
பிணமாக்கித் தாங்கள்
பிழைக்க நினைப்பாரோ
உதாரன்: நன்று மடமயிலே
நான்பசியால் வாடுகிறேன்
குன்றுபோல் அன்னம்
குவிந்திருக் கென்னெதிரில்
உண்ண முடியாதே
ஊராள்வோன் கூர்வாளும்
வண்ணமுடிச் செல்வாக்கும்
வந்து மறிக்குதடி
எண்ணக் கடலில்
எழுங்காதல் நீளலைதான்
உண்ணும் மணிக்குளத்தில்
ஓடிக் கலக்காமல்
நால்வருணங் கள்விதித்தார்
நாட்டார்கள் அன்னவற்றுள்
மேல்வருணம் கோல்கொண்டு
மேதினியை ஆள்வருணம்
நீயன்றோ பெண்ணே
நினைப்பை அகற்றிவிடு
நாயென்றே எண்ணிஎனை
நத்தாமல் நின்றுவிடு
வேல்விழியால் என்றன்
விலாப்புறத்தைக் கொத்தாதே
பால்போல் மொழியால்
பதைக்கஉயிர் வாங்காதே
கண்ணாடிக் கன்னத்தைக்
காட்டிஎன் உள்ளத்தைப்
புண்ணாக்கிப் போடாதே
போபோ மறைந்துவிடு
காதல் நெருப்பால்
கடலுன்மேல் தாவிடுவேன்
சாதியெனுஞ் சங்கிலிஎன்
தாளைப் பிணித்ததடி
பாளைச் சிரிப்பில்நான்
இன்று பதறிவிட்டால்
நாளைக்கு வேந்தனெனும்
நச்சரவுக் கென்செய்வேன்
கொஞ்சு தமிழ்த்தேன்
குடித்துவிட அட்டியில்லை
அஞ்சுவ தஞ்சாமை
பேதைமையன் றோஅணங்கே
ஆணிப்பொன் மேனி
அதிற்கிடக்கும் நல்லொளியைக்
காணிக்கை நீவைத்தால்
காப்பரசர் வாராரோ
பட்டாளச் சக்கரவர்த்தி
பார்த்தாலும் உன்சிரிப்புக்
கட்டாணி முத்துக்கா
லில்விழ மாட்டாரோ
அமுதவல்லி : நின்றழும் பாவலனே
உன்றன் நிலைகண்டு
குன்றும் இளகும்
கொடும்பாம்பும் நெஞ்சிளகும்
சித்தம் துடிக்கின்ற
சேயுன் நிலைமைக்கு
இரத்தவெறி கொண்டலையும்
இராசமனம் ஏனிரங்கும்
பித்தம் தலைக்கேறும்
பேய்ப்பழைமை ஏனிரங்கும்
வாளை உருவிவந்து
மன்னன் எனதுடலை
நாளையே வெட்டி
நடுக்கடலில் போடட்டும்
காளைஉன் கைகளெனைக்
காவாமல் போகட்டும்
தாளை அடைந்தஇத்
தையலுளம் மாறாதே
ஆதரவு காட்டாமல்
அய்ய எனைவிடுத்தால்
பாதரட்சை போலுன்றன்
பாதம் தொடர்வதன்றி
வேறு கதியறியேன்
வேந்தன் சதுர்வருணம்
சீறுமெனில் இந்தவுடல்
தீர்ந்தபின்னுஞ் சீறுமோ
ஆரத் தழுவி
அடுத்தவினா டிக்குளுயிர்
தீர வருமெனினும்
தேன்போல் வரவேற்பேன்
அன்றியுமென் காதல்
அமுதே நமதுள்ளம்
ஒன்றுபட்ட பின்னர்
உயர்வென்ன தாழ்வென்ன
நாட்டின் இளவரசி
நானொருத்தி யாதலால்
கோட்டை அரசனெனைக்
கொல்வதற்குச் சட்டமில்லை
கோல்வேந்தன் என் காதல்
கொற்றவனைக் கொல்லவந்தால்
சேல்விழியாள் நானெனது
செல்வாக்கால் காத்திடுவேன்
சாதியுயர் வென்றும்
தனத்தால் உயர்வென்றும்
போதாக் குறைக்குப்
பொதுத்தொழிலா ளர்சமூகம்
மெத்தஇழி வென்றும்
மிகுபெரும்பா லோரெல்லாம்
கத்திமுனை யிற்காட்டிக்
காலமெலாம் ஏய்த்துவரும்
பாவிக ளைத்திருத்த
பாவலனே நாமிருவர்
ஆவி களையேனும்
அர்ப்பணம்செய் வோம்இதனை
நெஞ்சார வுன்மேல்
நேரிழையாள் கொண்டுள்ள
விஞ்சுகின்ற காதலின்மேல்
ஆணையிட்டு விள்ளுகின்றேன்
பன்னிப் பலபேசல்
பாழ்படுத்தும் வெண்ணிலவை
கன்னியாள் தோள்மறுக்கக்
காரணந்தான் இன்னுமென்ன
மெய்யா யிதயத்தில்
மேவிடுங் காதலாலென்
கைவளை காத்திட முந்து
(இருவரும் ஆரத்தழுவுகின்றனர்)
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி
Leave a Reply