பாரெங்கும் தமிழ் – இல. பிரகாசம்
பாரெங்கும் பாரீர்! பாரெங்கும் பாரீர்!
தமிழினம் தனித் தன்மையோடு சேருவதைப்
பாரீர்! பாரீர்! பாரீர்!
பேதமைகளைத் தூக்கியெறிந்து ஒன்றாவதைப் பாரீர்!
வையகம் வென்றிட தோழமையோடு நடைபோடும்
தோழமைத் தமிழினம் இங்கே பாரீர்! பாரீர்!
வையகத் தலைமை கொண்டு வழிநடத்தும்
தமிழ் வேந்தர்களைப் பாரெங்கும் பாரீர்!
உயிரினும் மேலான அறத்தை நாளும்
வையக மெல்லாம் சீராய்ப் பரப்பும்
தரணி புகழ் கொண்ட தமிழன்
விண்ணுலகைச் சுட்டுவிரல் நுனியில் ஆட்டிவைக்கும்
விண்ணறிவு கொண்ட தமிழனைப் பாரீர்!
பாரெங்கும் பாரீர் பாரீர்!
எந்நாளும் எல்லார்க்கும் எல்லாம் ஈயும்
கொடையுள்ளம் கொண்ட கொடை வேந்தரை
ஈன்றெடுத்த தமிழ்த் தாயின் புதல்வனைப்
பாரெங்கும் பாரீர்! பாரீர்!
நல்லறம் இல்லறம் மானம் என்று
மூச்சாய்க் கொண்ட உறுதி மனம்
புகழ் கொண்ட தமிழினம் பாரீர்!
தமிழனம் தடையின்றி நிமிர் நடைபோட்டு
பறையறைய முழுவதிர யாழிசைக்க
ஆடவர் பெண்டிர் நடனம் புரிய
தமிழ் வையமெல்லாம் பவனி வர
வெற்றி முழக்கம் செய்யும் தமிழினம்
பாரெங்கும் பாரீர்! பாரீர்!
இல. பிரகாசம்
சிறகு: சித்திரை 03 / ஏப்பிரல்16, 2016 இதழ்
பாரெங்கும் பாரீர்! பாரெங்கும் பாரீர்!
தமிழினம் தனித் தன்மையோடு சேருவதைப்
பாரீர்! பாரீர்! பாரீர்!
பாடிப்பாடியே தமிழன் வீழ்ந்து கொண்டிருக்கிறான். தமிழும் தமிழினமும் வளரவேண்டும் என்று நினைப்பவர்கள் மிகக் குறைவு.
அவர்களும் இப்படிப் பாடியே தங்களை நிறைவு செய்து கொண்டால் எப்படித் தமிழினம் மேலெழும் ? தமிழ் காக்கப்படும். ?
உணர்வோடு உண்மையாகச் செய்ய வேண்டுவன நிறைய உள்ளன.
1) உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் தமிழ் கற்பிக்க வேண்டும். இன்றைய சூழலில் தமிழ்நாட்டு மழலையர்கள் கூட தமிழை விட்டு விலகிக் கொண்டே இருக்கிறார்கள். பெற்றோர்கள் இதற்குத் துணையாகிறார்கள். இதன் இழப்பு இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோர்களுக்கே தெரிய வரும்.
2) தரமான தமிழ்ப் படைப்பாக்கங்களை ஒலைச் சுவடியிலிருந்தது பெயர்த்து எழுதி அச்சாக்கியதைப் பாதுகாக்க வேண்டும்.
இன்று ஒலைச் சுவடியும் அழிந்துபோய், அச்சானதும் அழிந்து கொண்டிருக்கிறது. ஒரு தமிழன்கூட இது பற்றி சிந்திப்பது இல்லை. அதற்கான சிறு நகர்வைக்கூட செய்வது இல்லை. அனைத்தும் தன்நலம், தன்படைப்பும், தானும் தான் முன்னிலைப்படுத்தப்படவேண்டும் என்று தமிழறிஞர்கள் சுருங்கிப் போய்விட்டார்கள்.
3) 1890 களிலிருந்து 1960 வரை அச்சான அனைத்து வகையான நூல்களும் பாதுகாக்கப்படவேண்டும். ( அப்பாத்துரையார் 200 நூல்கள் எழுதினார். இறந்து போனார். இன்று 50 நூல்கள் கூட இல்லை. நாளை அதுவும் இருக்காது. அப்பாத்துரையார் பற்றி பேசி மேலெழுபவர்கள் இருப்பார்கள், பிறந்தநாள், இறந்தநாள் கொண்டாடுவார்கள், சிலை வைப்பார்கள். இது சரியா ? )
4) வணிகமாகிப்போன நூல்களைப் பதிப்பிடும் பதிப்பகங்களும். நுட்பத்திற்கு அடித்தளமிடாது, குடிக்கிறார்கள் என்று மதுவைக் கொடுப்பது போல விரும்புகிறார்கள் என்று அச்சாக்கி வணிகம் செய்து நெஞ்சு நிமிர்த்துகின்றன.
5) தமிழ்க்கலை, பண்பாடு, சூழலில் இருந்த அரிய வகை நிலத்திணைகளும் இன்று பாதுகாக்கவேண்டிய நிலையில் உள்ளன.
6) இது பற்றி யார் சிந்தித்துச் செயற்படுகிறார்களோ அவர்களே தமிழிய உணர்வாளர்கள், வெற்று முழக்கங்களாலும், கூட்டங்களாலும், பரிசளிப்புகளாலும், நிகழ்வுகளாலும் எதுவும் நிகழ்ந்துவிடாது. பொழுது இனிமையாகப் போகும். வெள்ளை உடுத்தி, தமிழறிஞர்கள் என்று உலா வரலாம்.
7) மறைந்து போன நூல்களின் பட்டியல் பார்த்தேன், இன்று அதன் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. உணர்வு உள்ளவர்கள் உங்கள் பகுதியில் உள்ள அரிய, பழைய, அச்சுநூல்களைத் திரட்டுங்கள், முதற்கட்டமாக அவற்றைப் பட வடிவக் கோப்புகளாக்கிப் பாதுகாப்போம். நூல்களின் பெயர், ஆசிரியர் பெயர் வெளியான ஆண்டு – குறிப்பிட்டு மின்அஞ்சல் செய்தால் அந்த நூல் படவடிவக்கோப்பாக்கிப் பாதுகாக்கப்பட்டதா, இல்லையா என மின் அஞ்சல் செய்கிறேன்.
8) பல்கலைக் கழக நூலகங்களும், தனியார், அரசு நூலகங்களும் இது பற்றிச் சிந்தித்து பழைய உடையும் நிலையில் உள்ள நூல்களைப் பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டும். பாதுகாப்பதற்கான வழிமுறைகளுக்கான பயிற்சியும் தருகிறேன். அல்லது அனுப்பி வைத்தால் படவடிவக் கோப்புகளாக்கியும் தருகிறேன்.
ஒவ்வொருநாளும் நாம் ஒரு தமிழ் நூலை இழந்து கொண்டிருக்கிறேர்ம். ஒருவேளை உணவு உண்ணும் முன் இந்த உணர்வு தமிழர்களுக்கு எழ வேண்டும்.
அன்புடன்
பொள்ளாச்சி நசன் – 9788552061 – http://www.thamizham.net —– thamizham.FM