பிரிந்து மறைந்தது முறையா ஐயா? —மறைமலை இலக்குவனார்

புலவரேறு பெ.அ.இளஞ்செழியன் [வைகாசி 28, 1969 / 10.06.1938 – ஐப்பசி 14,2052 / 31.10.2021]
பிரிந்து மறைந்தது முறையா ஐயா?
அன்பே உருவாய் ஆட்கொண் டீரே
பண்பின் வடிவாய் எமைக் கவர்ந்தீரே
நட்பின் இலக்கணம் கற்பித்தீரே
பிரிய இயலாப் பரிவின் உருவே
பிரிந்து சென்றிட எப்படி ஒப்பினீர்?
காலம் முழுமையும் கட்சிக்கு உழைத்தீர்!
காலணாப் பயனும் கருதா மனத்தீர்!
திராவிட இயக்கப் பாவலர் அணியில்
முன்னணி வரிசை முதல்வர் நீவிர்!
அண்ணா கலைஞர் பேராசிரியர்
எந்நாளும் நீர் போற்றிடும் நாவலர்
அனைவரும் உமது அருமை அறிவரே?
மாநாட்டுமலர் என்று எண்ணினால்
கூப்பிடு புலவரை என்றே அனைவரும்
ஆர்த்திடும் வகையில் ஆற்றினீர் பணிகள்!
சுரதா மகிழ்ந்து போற்றும் கவிஞராய்
மரபின் மாண்பை உணர்த்தும் புலவராய்
அருமைக் கவிதை ஆயிரம் வழங்கினீர்!
செருக்கும் தருக்கும் நிறைந்த உலகில்
அடக்கம் ஒன்றே நெறியெனக் கொண்டீர்!
அகத்தே கருத்துப் புறத்தே மிளிரும்
வெளிச்சப் புள்ளிகள் மலிந்த உலகில்
வாய்மை நேர்மை தூய்மை போற்றினீர்!
வள்ளலார் வழியில் வாழ்வை நடத்தினீர்!
துணைவியார் மறைந்த துயர்மிகு வாழ்வில்
இனிமேல் இடர் ஏன் என நினைத்தீரோ?
தொற்று மிகுந்த சுற்றுச் சூழலில்
இலக்கிய நிகழ்ச்சி ஏதும் இல்லாமல்
வெற்று வாழ்வு வேண்டாம் என்றா
பற்று நீங்கிப் பறந்தீர் ஐயா?
உம்மை இழந்து உயிரைப் பேணிடும்
உறுதி எமக்குத் தேவை என்றே
சொல்லிக் கொள்ள மனமும் இன்றிப்
பிரிந்து மறைந்தீர்! முறையா ஐயா?
உங்கள் அருமை பெருமை அறிந்த
எமக்கு வெறுமை வாழ்வை வழங்கினீர்
அழுது அரற்றினால் அவலம் மறையுமா?
ஒப்புக்கு அழுது மறந்து போக
நாங்கள் என்ன நாடக நண்பர்களா?
நாவலர் நூற்றாண்டுவிழா பார்க்காமல்
நல்லுயிர் நீத்திட ஏன் விரைந்தீரோ?
—முனைவர் மறைமலை இலக்குவனார்
காண்க –
Leave a Reply