பீலிபெய் நடுகல்

மண்காத்து தன் உயிர் நீத்தவர்
பீலிபெய் நடுகல் அல்லது பிறிது உரை
பேழ் வாய்ப் பூதம் பேய்க்கதை கூறும்
மறை மொழி ஈண்டு என்னிஃது பகரும்.
பிறப்பும் இறப்பும் அடுக்கிய ஊழ் தனில்
இருப்பின் பொறிகிளர் எல்லே எல்லாம்
சொல்லிச்செல்லும் மெய்மொழி உணரார்
கல்படு சுனை ஒரு நுங்கின் கண் என‌
பளிங்கு வீழ்த்த நிழற்பட்டாங்கு
உள்ளம் பாழ்த்து அஞ்சவும் படுமே
.

சொற்கீரன்

விளக்க உரை

தன் தாய்மண் காக்க உயிர்நீத்தவர் பற்றி மயில் பீலி சூட்டிய அந்த நடுகல் காட்டும் உரைகள் தவிர வேறு வாய்பிளந்த பூதம் பேய்களின் கதைகளா அங்கு இருக்கும்? மந்திரச்சொற்கள் வேறு என்ன இங்கு பகரும்? பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் வருவது விதி என்பதில் யாது பயன்? இப்போது நம்மிடம் இருக்கும் நடப்பு வாழ்க்கை பற்றிச் சுள்ளென்று அந்த சூரியன் சூடு காட்டி சொல்லிச்செல்லும் உண்மையை உணராதவர் ஒரு அச்சத்தில் தோய்ந்து கிடப்பார்கள். சுனையின் நடுவே நீரின் நிழலை பனை நுங்கின் கண்ணீர் என மயங்கி வாடுபவர் போல் வெறும் புனைகதைகளின் பால் பட்டு கலங்கித்துன்புறுவர்.

சொற்கீரன்