பெரியார் யார்? 

 

மலம் அள்ளும் தொழிலாளி இல்லாவிட்டால்,

வாழும் ஊர் நாறிவிடும்; மேலும் மேலும்

பலதொற்று நோய்களெலாம் பரவும்; வாட்டும்!

பல்வேறு வகை உடைகள் சுமந்து சென்று

சலவைசெயும் பாட்டாளி இல்லையென்றால்

தனித்தோற்றம் நமக்கேது? எழிலும் ஏது?

விலங்கினின்று வேறுபட்டோன் மனிதன் என்னும்

விழுமியம்தான் நமக்குண்டா? பொலிவும் உண்டா?

சிகைதிருத்தி அழகூட்டும் உயர்பாட் டாளி

திருநாட்டில் இல்லாமற் போனால், நாமும்

குகைமனிதக் குரங்குகள்போல், கரடி கள்போல்

கொடுமைமிகு தோற்றமுடன் இருப்போம்! நன்கு

வகைவகையாய் உடைநெய்து எழிலைச் சேர்க்கும்

வண்மைமிகு நெசவாளி இல்லா விட்டால்,

அகம்மகிழ அணிகின்ற ஆடை ஏது?

அன்றாட நாகரிகம் தழைத்தல் ஏது?

வசிப்பதற்கே வீடுகட்டும் நற்பாட் டாளி

மண்மீது இலையென்றால் காப்பும் ஏது?

பசியோட்டும் ஏருழவன் இல்லா விட்டால்,

பாரகத்தில் உயிர்ஏது? உலகே ஏது?

விசித்திரமாய் இவரெல்லாம் ‘சூத்திரர்’ என்றார்

வீண்வருண ஆரியர்கள்! ‘கீழோர்’ என்றார்!

பொசுக்கிட்டார் அவர்வாதம் பெரியார்! வீரப்

புரட்சியினால் ‘சமநீதி’ பெற்றுத் தந்தார்!

கவிஞர் வேழவேந்தன்

கவிவேந்தர் கா.வேழவேந்தன் (முன்னாள் அமைச்சர்)

விடுதலை 16.09.2018

 

http://www.viduthalai.in/e-paper/168577.html