பெரும்பசிக்காரர்களின் தீராவேட்கை 

 

அறிவின் சுடுகாட்டிற்கென

அமைந்த வழிகள் ஏராளம் ஏராளம்

எழுதுங்கள் எழுதுங்கள்

எல்லாத் தேர்வுகளையும்

 

பாடத்திட்டப் படுகுழிகள்

எப்போதும்

பயன்பாட்டிலேயே இருக்கின்றன

 

மதிப்பெண்களால் சிதைக்கப்பட்ட

மனித மூளைகள்

வரலாற்றுப் பெட்டிகளில்

பாதுகாப்புடன் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன

 

பெரும்பசிக்காரர்களின் தீராவேட்கையுடன்

அறுப்பதற்காகவே

ஆடுகளும் கோழிகளும்

அலங்கரிக்கப்பட்டுள்ளன

 

நித்திரை மன்றங்களின்

சுத்தியல்பட்டு

சிந்திய இரத்தவாந்திகள்

அவ்வப்போது உடனுக்குடனே

‘சுடச்சுட’

அலசப்படுகின்றன

 

பற்பலவற்றை

ஆவணப்படுத்தாமலிருப்பது

அருமை மீயருமை

 

வருணவழிப் ‘பட்ட’ கல்வியில்

கல் மண் முள் கழிவுகள்

 

காளைகளின் கொம்புகளிலிருந்து

கறக்கப்பட்ட பாலிலிருந்து

கசக்கியெடுக்கப்பட்ட

வெண்ணெய்யும் நெய்யும்

வீதிவரை மணக்கும் வாசத்துடன்

விற்பனைக்குக் கிடைக்கின்றன

 

வரலாற்றுப் புகழ்கொண்ட வன்மலைகள்

நூல்கொண்டு உடைத்தெரியப்படும் போதெல்லாம்

பெருக்கெடுக்கும் உப்பாறுகள்

ஊதியே காயவைக்கப்படுகின்றன

சில்லறைக் காசுகளால் சிறைவைக்கப்படுகின்றன

 

கூட்டுழைப்பில்

அரங்கேற்றம் முடித்தவேளையில்

அரவம்காட்டி ‘நீட்’டப்பட்டிருந்தது

பண்டுவக்காரரின் பிணம்

அன்பத்தங்கை அனிதாவிற்கு

                                                                                                                தமிழ்சிவா

காந்திகிராமம்