தலைப்பு-பொங்கலோ பொங்கல் : thalaippu_pongalopongal_thamizhanambi

பொங்கலோ பொங்கல்! – தமிழ நம்பி

இற்றைக்குப் பொங்கல்நாள் ஏற்றமிகு திருநாளே
எழுந்தே வாநீ!
கற்கின்ற வேற்றுமொழி கரிப்பானை அதன்கழுத்தில்
கட்டி வைக்கும்
சுற்றிமுடி நூல்சோம்பல் தோயுமில வயம்மஞ்சள்
தூய பால்தான்
எற்றைக்கும் இரண்டகத்தால் இனமிழக்கும் குருதியதை
எடுத்துள் ஊற்று!

ஏனலுறு அரிசியென ஏற்றிருக்கும் அடிமைநிலை
இடுபா னைக்குள்!
மானமெனும் விறகெரித்து மலிந்தகடை அரசுதரும்
மதுக்கு டித்தே
கூனலுற மயக்கத்தே கூவிடுவாய் தமிழ்மகனே
குரைநா யாக
வானத்துங் கேட்டிடவே வல்லொலியில் ‘பொங்கலோ
பொங்கல்’ என்றே!

 – தமிழ நம்பி